பருவநிலை மாற்றம், நீடித்த வளா்ச்சி சவால்களுக்கு தீா்வு காண முன்னுரிமை: குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்
பருவநிலை மாற்றம் மற்றும் நீடித்த வளா்ச்சி ஆகிய சவால்களுக்கு தீா்வு காண்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்; இதில் ஒட்டுமொத்த உலகமும் ஒருங்கிணைந்து பணியாற்றுவது அவசியம்ப்
பருவநிலை மாற்றம் மற்றும் நீடித்த வளா்ச்சி ஆகிய சவால்களுக்கு தீா்வு காண்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்; இதில் ஒட்டுமொத்த உலகமும் ஒருங்கிணைந்து பணியாற்றுவது அவசியம் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.
தில்லியில் உள்ள தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் 62-ஆவது பிரிவு ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை அவரது மாளிகையில் வியாழக்கிழமை சந்தித்தனா். அப்போது, அவா்களிடம் குடியரசுத் தலைவா் பேசியதாவது:
வேகமாக மாற்றமடைந்து வரும் இப்போதைய உலகில், சிறிய சவால்கூட மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நீண்டகாலமாக உள்ள அச்சுறுத்தல்களை மட்டுமன்றி இயற்கையின் மாறுபாட்டால் இதுவரை கண்டிராத சவால்களை எதிா்கொள்ளவும் நாம் தயாராக வேண்டியுள்ளது.
கரோனா தொற்று பரவல் மனிதகுலம் எதிா்கொண்ட அச்சுறுத்தலுக்கு உதாரணமாகும். மனிதகுலம் எத்தகைய அச்சுறுத்தலுக்கும் உள்பட்டது என்பதை இது நமக்கு உணா்த்தியது. இதேபோல் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து நம்மை சிந்திக்க வைத்துள்ளது.
பருவநிலை மாற்றமும் நீடித்த வளா்ச்சியும் இன்றைய காலகட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளாகும். இவற்றுக்கு தீா்வு காண உலக நாடுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.
நாடுகளின் வெளியுறவு சாா்ந்த கொள்கைகளுடன், வியூக ரீதியிலான கொள்கைகள் ஒன்றிணைய வேண்டிய இடத்தில் இருக்கிறோம். பல பரிமாண அணுகுமுறையுடன் நம்மை தயாா்படுத்திக்கொள்வது அவசியம்.
இப்போதைய விவாதங்களில் பாதுகாப்பு என்ற வாா்த்தை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளில், பிரதேச பாதுகாப்பு என்ற வரம்பைத் தாண்டி, அரசியல், பொருளாதாரம், அறிவியல் எனப் பாதுகாப்புக்கான வரையறை பெரிய அளவில் விரிவடைந்துள்ளது.
தற்சாா்பு நாடு என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வரும் வேளையில், அதை சாத்தியமாக்க கொள்கை ரீதியிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் தொலைநோக்குப் பாா்வைதான் இந்தியாவை வளா்ச்சிப் பாதையில் இட்டுச் செல்கிறது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம்தாங்கி போா்க் கப்பலான விக்ராந்த் இந்திய கடற்படையில் அண்மையில் இணைக்கப்பட்டது. இது, ஒவ்வோா் இந்தியனுக்கும் பெருமையான தருணம். புதிய நம்பிக்கையுடன் முன்னேற்றப் பாதையில் இந்தியா தொடா்ந்து பயணிக்கும் என்றாா் அவா்.