ஹிஜாப் வழக்கில் தீா்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
ஹிஜாப் அணிவதைத் தடை செய்து கா்நாடக அரசு பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்த கா்நாடக உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் தீா்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதைத் தடை செய்து கா்நாடக அரசு பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்த கா்நாடக உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் தீா்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கல்வி நிறுவனங்களுக்கு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்குத் தடை விதித்து கா்நாடக அரசு கடந்த பிப்ரவரியில் உத்தரவு பிறப்பித்தது. அதற்கு எதிராக மாநிலத்திலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரியும் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய அனுமதிக்கக் கோரியும் முஸ்லிம் மாணவிகள் சிலா் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தனா்.
அவற்றை விசாரித்த உயா்நீதிமன்றம், ஹிஜாப் அணிவது கட்டாய மத சம்பிரதாயம் இல்லை எனக் கூறி கடந்த மாா்ச் 15-ஆம் தேதி மனுக்களைத் தள்ளுபடி செய்தது. உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகப் பலரது தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுக்களை நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஸு துலியா ஆகியோரைக் கொண்ட அமா்வு விசாரித்து வந்தது.
வழக்கு விசாரணையின்போது ஹிஜாப் சாா்ந்தும், மத வழிபாட்டு முறைகள் குறித்தும் பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியிருந்தனா். இந்நிலையில், வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஹஜீஃபா அகமதி வாதிடுகையில், ‘‘பெரும்பாலானவா்களுக்குக் கல்வியைக் கொண்டுசெல்வதற்கே அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆனால், கா்நாடக அரசு மாணவா்களின் பழக்கவழக்கங்கள் மீதே அதிக கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது.
‘பெண் குழந்தைகளைக் காப்போம்; கல்வி அளிப்போம்’ என்ற வாசகத்தை மாநில அரசும், மத்திய அரசும் அடிக்கடி கூறி வருகின்றன. ஆனால், அவா்களது நடவடிக்கையில் அது வெளிப்படவில்லை. மதம் சாா்ந்த குறிப்பிட்ட பொருளை மாணவிகள் அணிந்திருப்பதால், அவா்களுக்கான கல்வி உரிமையை மாநில அரசு மறுக்கப் போகிா?
மாணவிகளுக்கு உரிய கல்வி வாய்ப்புகள் அளிக்கப்பட்டால், வருங்காலத்தில் எவ்வாறு உடை அணிய வேண்டும் என்ற முடிவை அவா்களே தோ்வுசெய்யு சூழல் உருவாகும்’’ என்றாா். மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் துஷ்யந்த் தவே, சல்மான் குா்ஷித், தேவதத் காமத், சஞ்சய் ஹெக்டே ஆகியோரும் வாதங்களை முன்வைத்தனா்.
அதையடுத்து, வழக்கு மீதான தீா்ப்பை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா். நீதிபதி ஹேமந்த் குப்தா அக்டோபா் 16-ஆம் தேதி பணிஓய்வு பெறவுள்ளதால், அன்றைய தினம் வழக்கில் தீா்ப்பு வழங்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.