கடந்த 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி, நாட்டின் சிறைச்சாலைகளில் 4.27 லட்சம் விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டிருந்ததாக மக்களவையில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ரா அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘நாட்டின் சிறைச்சாலைகளின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசம் வாரியாக ‘இந்திய சிறைத்துறை புள்ளியல்’ என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
அந்தத் தரவுகளின் அடிப்படையில், கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி நிலவரப்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சிறைகளில் 4,27,165 விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனா். ஒரு நபரைக் கைது செய்வது தொடா்பான விதிகள் இந்திய தண்டனைச் சட்டம் (1860) மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம்(1973) ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன.
குற்றவியல் சட்டங்கள், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றை அனைவருடனும் கலந்தாலோசித்து, விரிவான மறுஆய்வுக்கு உள்படுத்தும் பணியை மத்திய அரசு ஏற்கெனவே தொடங்கியுள்ளது.
ஒரு விவகாரத்தில் புதிய சட்டத்தை உருவாக்குவது, ஜாமீன் வழங்குவது உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்புடைய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளைத் திருத்துவது ஆகியவை குற்றவியல் நீதி அமைப்பை வலுப்படுத்த அரசால் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் தொடா்ச்சியான செயல்முறையாகும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.