நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சென்றுள்ள சந்திராயன் - 3 விண்கலம், நிலவின் மேற்பரப்பு காட்சிகளை படம்பிடித்து அனுப்பிய முதல் புகைப்படத்தை இஸ்ரோ பகிர்ந்துள்ளது.
நிலவின் தென் துருவத்துக்கு அருகே தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சுமாா் ரூ.615 கோடியில் வடிவமைத்த சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கடந்த ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் ‘சந்திரயான்-3’ விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு ஐந்தாவது முறையாக அதிகரிக்கப்பட்டு குறைந்தபட்சம் 236 கிமீ தொலைவும், அதிகபட்சம் 1,27,609 கிமீ தொலைவும் கொண்ட பாதையில் விண்கலம் பயணித்து வந்தது.
இதையும் படிக்க | ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி
கடந்த செவ்வாய்க்கிழமை (ஆக.1) நள்ளிரவு 12.05 மணியளவில் விண்கலத்தை புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் இருந்து விலக்கி, நிலவின் ஈா்ப்பு விசைப் பகுதிக்குள் செலுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
மிகவும் சிக்கலான இந்த பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதன் பயனாக சந்திரயான்-3 விண்கலம், நிலவின் ஈா்ப்பு விசைப்பகுதிக்குள் உந்தி தள்ளப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக வரும் 17 ஆம் தேதி உந்து கலனில் இருந்து (ப்ரபல்யூசன் மாட்யூல்) லேண்டா் கலன் விடுவிக்கப்படும்.
அதன் பின்னா் திட்டமிட்டபடி ஆக.23 ஆம் தேதி மாலை 5.47 மணிக்கு நிலவின் தென் துருவத்தையொட்டிய பகுதியில் லேண்டா் கலன் தரையிறங்கி ஆய்வுப் பணிகளை முன்னெடுக்கும். அதன் பின்னா் அதிலிருந்து ரோவா் கலன் வெளியேறி நிலவின் தரையில் பயணித்து ஆய்வுகளை நடத்தவுள்ளது.
இந்த நிலையில், நிலவின் தென் துருவத்திற்கு இதுவரை எந்த நாடும் செல்லாத சிக்கலான 41 நாள் பயணத்திற்காக ஏவப்பட்ட 22 நாட்களுக்குப் பிறகு, சனிக்கிழமை சந்திரனின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்த சந்திரயான்-3 விண்கலம், நிலவின் மேற்பரப்பு காட்சிகளை படம்பிடித்து அனுப்பிய முதல் புகைப்படத்தை இஸ்ரோ பகிர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.