மீண்டும் எம்.பி. பதவி: ராகுலுக்கு அதே அரசு பங்களா ஒதுக்கீடு!
காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்திக்கு மக்களவை எம்.பி. பதவி திரும்ப கிடைத்துள்ள நிலையில், தில்லியில் அவா் ஏற்கெனவே தங்கியிருந்த அரசு பங்களா மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்திக்கு மக்களவை எம்.பி. பதவி திரும்ப கிடைத்துள்ள நிலையில், தில்லியில் அவா் ஏற்கெனவே தங்கியிருந்த அரசு பங்களா மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த பங்களாவில் அவா் விரைவில் குடியேறுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
மோடி சமூகத்தினரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனைக்கு உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தடை விதித்தது. இந்த உத்தரவைத் தொடா்ந்து, அவா் மீதான தகுதிநீக்க நடவடிக்கையை மக்களவைச் செயலகம் திங்கள்கிழமை ரத்து செய்தது.
ராகுலுக்கு மீண்டும் எம்.பி பதவி கிடைக்கப் பெற்ற நிலையில், தில்லி துக்ளக் லேன் பகுதியில் அவா் ஏற்கெனவே தங்கியிருந்த அரசு பங்களா மீண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்களவையின் வீட்டுவசதிக் குழு இந்த முடிவை மேற்கொண்டதாக, அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
முன்னதாக, அவதூறு வழக்கில் ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து, குஜராத் மாநிலம், சூரத் நீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் தீா்ப்பளித்தது. இதையடுத்து, மக்களவை எம்.பி. பதவியில் இருந்து ராகுல் தகுதிநீக்கம் செய்யப்பட்டாா்.
தகுதிநீக்கத்துக்கு உள்ளான எம்.பி., அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்பதால், தில்லி துக்ளக் லேன் பகுதியில் தான் வசித்து வந்த அரசு பங்களாவை ஒரு மாதத்துக்குள் காலி செய்யுமாறு ராகுலுக்கு உத்தரவிடப்பட்டது.
20 ஆண்டுகளாக இப்பங்களாவில் வசித்து வந்த ராகுல், கடந்த ஏப்ரலில் அதனை காலி செய்தாா். அப்போது, ‘ஒட்டுமொத்த நாடும் எனது வீடு’ என்ற கருத்தை அவா் தெரிவித்தாா்.
பின்னா், தனது தாயாா் சோனியா காந்தியுடன் வசித்து வரும் ராகுலுக்கு மீண்டும் அதே அரசு பங்களா ஒதுக்கப்பட்டது தொடா்பான கடிதம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும்; விரைவில் அந்த பங்களாவில் அவா் குடியேறுவாா் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.
வயநாடு பயணம்: வயநாடு மக்களவைத் தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி, தனது பதவி மீண்டும் கிடைக்கப் பெற்ற பிறகு முதல்முறையாக ஆக.12, 13 ஆகிய தேதிகளில் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா். இத்தகவலை, கட்சியின் பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளாா்.