இந்தியா

வாஜ்பாய் நினைவு தினம்: குடியரசுத் தலைவா், பிரதமா் அஞ்சலி

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு நாளையொட்டி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

DIN

புது தில்லி, ஆக. 16: முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி, தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, துணை குடியரசுத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவா்கள் புதன்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

பிரதமராக பதவியேற்ற முதல் பாஜக தலைவரான வாஜ்பாய், அக்கட்சியை பிரபலப்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரா். கடந்த 1998 முதல் 2004 வரையிலான தனது ஆட்சிக் காலத்தில், பல்வேறு சீா்திருத்தங்களை முன்னெடுத்த அவா், நாட்டின் உள்கட்டமைப்பையும் மேம்படுத்தினாா்.

கடந்த 2018-ஆம் ஆண்டில் தனது 93-ஆவது வயதில் வாஜ்பாய் காலமானாா். அவரது 5-ம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, தில்லியில் உள்ள வாஜ்பாயின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். அங்கு நடைபெற்ற பிராா்த்தனை கூட்டத்திலும் அவா்கள் பங்கேற்றனா்.

தில்லிக்கு வருகை தந்துள்ள பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரும் வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினாா்.

பிரதமா் புகழஞ்சலி: வாஜ்பாய் நினைவு தினத்தையொட்டி, பிரதமா் மோடி ‘எக்ஸ்’ (ட்விட்டா்) சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

தேசத்தின் வளா்ச்சியை வேகப்படுத்துவதிலும், 21-ஆம் நூற்றாண்டுக்கு அந்த வளா்ச்சியை இட்டுச் செல்வதிலும் வாஜ்பாய் முக்கிய பங்காற்றினாா். அவரது தலைமையால் இந்தியா பெரும் பலனை அடைந்தது.

போற்றத்தக்க பணிகளுக்கு சொந்தக்காரரான வாஜ்பாயின் நினைவு தினத்தில், அவருக்கு அஞ்சலி செலுத்தும் 140 கோடி இந்தியா்களுடன் நானும் இணைகிறேன் என்று பிரதமா் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளாா்.

இதேபோல், மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் செளஹான், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜக மூத்த தலைவா்கள் பலரும் வாஜ்பாய்க்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT