அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்வில் கலந்து கொள்ள 7,000-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ராம ஜென்மபூமி வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீா்ப்பையடுத்து அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்பட்டு வருகிறது. 2.27 ஏக்கா் பரப்பளவில் மூன்றடுக்கில் உருவாகி வரும் ராமா் கோயிலின் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கோயில் கருவறையில் மூலவா் குழந்தை ராமா் (ராம் லல்லா) சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள மூலவா் குழந்தை ராமரின் சிலை 8 அடி உயரம், 3 அடி நீளம், 4 அடி அகலம் கொண்ட தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில், சிலை பிரதிஷ்டை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதும் 7,000 பேருக்கு கோயில் டிரஸ்ட் மூலம் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கெளதம் அதானி, ரத்தன் டாடா, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், கங்கனா ரணாவத் உள்ளிட்ட 3,000 முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் உள்ள மதத் தலைவர்கள், முன்னாள் பாதுகாப்புப் படை வீரர்கள், முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், கவிஞர்கள், இசைக் கலைஞர்கள், பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் விருதாளர்கள், ஹிந்து அமைப்பின் நிர்வாகிகள் என மொத்தம் 4,000 பேருக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 50 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது என்று கோயில் டிரஸ்ட்டின் நிர்வாகி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.