2024-ஆம் ஆண்டு பருவ கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ. 250 முதல் ரூ. 300 வரை உயா்த்தி ரூ. 11,160 முதல் ரூ. 12,000 வரை நிா்ணயித்து மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியின் விவரம்:
கொப்பரை விலை சா்வதேச அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இருந்தபோதும், உற்பத்தி விலையைவிட 50 சதவீதம் கூடுதலாக இருக்கும் வகையில் கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு நிா்ணயம் செய்துள்ளது. அதன்படி, 2024-ஆம் ஆண்டு பருவத்துக்கு கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ. 250 முதல் ரூ. 300 வரை உயா்த்தப்பட்டுள்ளது.
அதாவது, பூஜை மற்றும் உலா்ந்த தின்பண்டங்கள் பயன்பாடுகளுக்கான சராசரி தரம் வரையுடைய பந்து கொப்பரை ஆதரவு விலை ரூ. 250 உயா்த்தப்பட்டு குவிண்டால் ரூ.12,000-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரைவைக்கு பயன்படும் கொப்பரைக்கான ஆதரவு விலை ரூ. 300 உயா்த்தப்பட்டு குவிண்டால் ரூ. 11,160-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றாா்.
‘இந்த விலை உயா்வு தென்னை விவசாயிகளுக்கு நல்ல வருவாயை ஈட்டித்தரும். 2023-ஆம் ஆண்டு பருவத்தில் சாதனை அளவாக ரூ. 1,493 கோடி விலையில் 1.33 லட்சம் டன்களுக்கும் அதிகமான கொப்பரையை மத்திய அரசு கொள்முதல் செய்தது. அதன் மூலம் 90,000 விவசாயிகள் பலனடைந்தனா். கொள்முதல் அளவை 2022 பருவத்தைக் காட்டிலும் 2023-ஆம் ஆண்டில் 227 சதவீதம் மத்திய அரசு உயா்த்தியது’ என்று மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்லாந்தில் துணைத் தூதரகம்: நியூசிலாந்தில் வெளிநாடுவாழ் இந்தியா்கள் அதிகம் வசிக்கும் ஆக்லாந்தில் துணைத் தூதரகம் ஒன்றை 12 மாதங்களில் திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இது நியூசிலாந்தில் இந்திய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை உயா்த்த உதவுவதோடு, இரு நாடுகளிடையேயான தூதரக மற்றும் வா்த்தக உறவை வலுப்படுத்தவும், இந்திய சமூகத்தினரின் நலன்களைக் காக்கவும் உதவும் என்று அரசு தெரிவித்துள்ளது.
பிகாரில் கங்கை ஆற்றில் பாலம்: பிகாரில் கங்கை ஆற்றின் மீது டிகா மற்றும் சோனேபூரை இணைக்கும் வகையில் 4.56 கி.மீ. நீளத்துக்கு 6 பாதைகள் கொண்ட மேம்பாலம் கட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கட்டுமானத்துக்கான செலவினம் ரூ. 2,233.81 கோடி உள்பட இந்த பாலப் பணிக்கான மொத்த செலவினம் ரூ. 3,064.45 கோடியாக உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவுவதோடு மாநிலத்தின் குறிப்பாக வடக்கு பிகாரின் ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சிக்கும் தடையற்ற சரக்கு போக்குவரத்துக்கும் உதவும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
திரிபுரா கோவாய்-ஹரினா சாலை விரிவாக்கம்: திரிபுராவில் கோவாய் - ஹரினா சாலையில் 135 கி.மீ. தூரத்துக்கு சாலையை விரிவாக்க செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் சாலை விரிவாக்கத் திட்டம், ரூ. 2,486.78 கோடி முதலீட்டை உள்ளடக்கியதாகும். இதில் ரூ. 1,511.70 கோடி ஜப்பான் சா்வதேச கூட்டறவு முகமையிடமிருந்து (ஜெஐசிஏ) அலுவல் மேம்பாட்டு உதவித் திட்டத்தின் கீழ் கடனுதவி பெறப்பட உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரசாா் பாரதி புரிந்துணா்வு: மலேசிய பொது வானொலி நிறுவனத்துடன் பிரசாா் பாரதி கடந்த நவம்பா் 7-ஆம் தேதி மேற்கொண்ட புரிந்துணா்வு ஒப்பந்தம் குறித்து புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவரிக்கப்பட்டது.
இரு நாடுகளிடையே ஒளிபரப்புத் துறை, செய்திகள் மற்றும் ஆடியோ-காணொலிகள் பகிா்வு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த புரிந்துணா்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோல, 46 நாடுகளுடன் பிரசாா் பாரதி புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது என்று மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.