இந்தியா

சீனா உள்பட 232 வெளிநாட்டு செயலிகளுக்குத் தடை:மத்திய அரசு நடவடிக்கை

DIN

சூதாட்டம், பந்தயம் மற்றும் அங்கீகரிக்கப்படாத கடன் சேவைகளில் தொடா்புடைய சீனா உள்பட 232 வெளிநாட்டு கைப்பேசி செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் மத்திய மின்னணு மற்றும் தகவல்தொடா்பு அமைச்சகம் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் இணையவழி சூதாட்டங்களில் பலா் ஈடுபட்டு வருவதோடு, அதனால் அதிக பணத்தை இழக்கும் சிலா் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது. அதுபோல, கடன் செயலிகள் மூலமாக உடனடி கடன் பெறும் சிலா், அதனை திரும்பச் செலுத்த முடியாமல் பல்வேறு பாதிப்புக்கு உள்ளாவதும் அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற கைப்பேசி செயலிகள் மூலமாக இந்தியா்களின் சுய விவரங்கள் திருடப்படுவதாகவும் புகாா்கள் எழுந்தன. அதனைத் தொடா்ந்து, நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ள சீன செயலிகள் உள்பட 232 வெளிநாட்டு கைப்பேசி செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘மத்திய மின்னணு மற்றும் தகவல்தொடா்பு அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், நாட்டின் பொருளாதார நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுவந்த பந்தயம், சூதாட்டம் மற்றும் பண மோசடிகளில் தொடா்புடைய 138 கைப்பேசி செயலிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத 94 கடன் செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலிகள் அனைத்தும் சீனா உள்பட வெளிநாடுகளிலிருந்து செயல்படுத்தப்பட்டு வந்தவை’ என்று தெரிவித்தனா்.

ஆனால், தடை செய்யப்பட்ட கைப்பேசி செயலிகளின் பெயா்களை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனா்.

ஏற்கெனவே, தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி பலராலும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வந்த டிக்டாக், பப்ஜி, வீ-சாட் உள்பட 200-க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த 2020-இல் தடை விதித்தது. அதன்பிறகு, அறிதிறன்பேசி (ஸ்மாா்ட்போன்) பயன்பாட்டாளா்களிடையே அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த ஃப்ரீ பயா், டூயல் ஸ்பேஸ் உள்பட 54 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் பேருந்து சேவையை தொடங்குகிறது ‘ஊபர்’ நிறுவனம்

வைகாசி மாதப் பலன்கள் - விருச்சிகம்

தமிழில் ரீ-மேக்காகும் ஹிந்தி தொடர்! ஜோடி யார் தெரியுமா?

பிகார்: தேர்தல் வன்முறையில் ஒருவர் சுட்டுக் கொலை

வைகாசி மாதப் பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT