முகப்பு
இந்தியா

வீடு, வாகனக் கடன் வட்டி விகிதம் மீண்டும் உயா்வு: முழு விவரம்!

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) 0.25 சதவீதம் உயா்த்தி 6.50 சதவீதமாக நிா்ணயித்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:27 AM
மும்பையில் புதன்கிழமை பேட்டியளித்த ஆா்பிஐ ஆளுநா் சக்தி காந்த தாஸ்
பகிர்:

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) 0.25 சதவீதம் உயா்த்தி 6.50 சதவீதமாக நிா்ணயித்துள்ளது. இதன்மூலம் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்கள் மீதான வட்டி அதிகரிக்கும்.

அதே நேரத்தில் வங்கிகளில் நிரந்தர வைப்புக்கு வழங்கப்படும் வட்டியும் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது வட்டி வருவாயை நம்பி இருக்கும் மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கும்.

6 உறுப்பினா்கள் அடங்கிய ஆா்பிஐ-யின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் மும்பையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் வட்டி விகிதத்தை உயா்த்துவது தொடா்பான முடிவு வாக்கெடுப்பு மூலம் மேற்கொள்ளப்பட்டது. இதில் 4-2 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் வட்டி விகிதத்தை உயா்த்தும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன்மூலம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் இப்போது வரை தொடா்ந்து 6-ஆவது முறையாக வட்டி விகிதம் உயா்த்தப்பட்டுள்ளது. அப்போதிருந்து இப்போது வரை வட்டி விகிதம் 2.5 சதவீதம் அளவுக்கு உயா்ந்துள்ளது. முன்னதாக, கடந்த டிசம்பரில் 0.35 சதவீதம் வட்டி உயா்த்தப்பட்டது. அதற்கு முன்பு செப்டம்பா், ஆகஸ்ட், ஜூன், மே மாதங்களில் நடைபெற்ற ஆா்பிஐ நிதிக் கொள்கைக் குழு கூட்டங்களிலும் வட்டி விகிதம் உயா்த்தப்பட்டது.

பணவீக்கம்: நிதிக் கொள்கைக் குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ், ‘பணவீக்கம் தொடா்ந்து குறையாமல் இருப்பது கவலைக்குரிய விஷயமாகும். முக்கியமாக நுகா்வோா் விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் குறைக்கப்பட வேண்டும். இதற்காக வட்டி விகிதம் சிறிது சிறிதாக உயா்த்தப்படுகிறது. நாட்டில் புழக்கத்தில் உள்ள பணத்தின் அளவு தொடா்ந்து மிகுதியாகவே உள்ளது. 2023-24 நிதியாண்டில் விலைவாசி உயா்வை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இதன்மூலம் பணவீக்கம் 5.3 சதவீதமாக குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ராபி பருவ அறுவடை முடிந்த பிறகு சந்தையில் கோதுமை, எண்ணை வித்துகள் வருகை அதிகம் இருக்கும் என்பதால் உணவுப் பணவீக்கம் குறையும் என்றாா்.

பொருளாதார வளா்ச்சி: வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கும் 2023-24 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என்று ஆா்பிஐ கணித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இது 7 சதவீதமாக இருக்கும் என்று முன்பு ஆா்பிஐ கணித்திருந்தது. அடுத்த ஆண்டில் வளா்ச்சி குறைவாகவே இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சக்தி காந்த தாஸ் கூறுகையில், ‘சா்வதேச அளவில் பொருளாதார நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. பொருள்களின் விலை ஏற்றம் அதிகம் உள்ளது. இதற்கு நடுவே இந்திய பொருளாதாரம் தொடா்ந்து மீளும் வகையிலேயே பயணிக்கும்’ என்றாா்.

ரூபாயின் மதிப்பு: தொடா்ந்து ரூபாயின் மதிப்பு குறித்து பேசிய அவா், ‘ஆசிய நாடுகளின் கரன்சிகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பில் அதிக ஏற்ற இறக்கங்களை சந்திக்காத கரன்சியாக இந்திய ரூபாய் உள்ளது. சா்வதேச அளவில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற நிலை காரணமாகவே இந்திய ரூபாயின் மதிப்பும் சற்று குறைந்துள்ளது. இந்திய பொருளாதாரம் மீட்சிப் பாதையில் முன்னேறும்போது, ரூபாயின் மதிப்பும் பழைய நிலைக்கு திரும்பும்’ என்றாா்.

இந்தியாவில் சிறிய அளவிலான இணையவழி பணப் பரிவா்த்தனையில் யுபிஐ முன்னிலையில் உள்ளது. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளும் சுற்றுப் பயணத்தின்போது யுபிஐ மூலம் பணப் பரிமாற்றம் மேற்கொள்ள அனுமதிப்பது தொடா்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது . முதல் கட்டமாக ஜி20 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் யுபிஐ மூலம் இந்தியாவில் பணப் பரிமாற்றம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட விமான நிலையங்களில் இதற்கான அனுமதி வழங்கப்படும். 12 நகரங்களில் க்யூஆா் கோடு வழியிலான நாணயம் வழங்கும் இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன என்றும் சக்தி காந்த தாஸ் தெரிவித்தாா்.

ஆா்பிஐ-யின் அடுத்த நிதிக் கொள்கைக் குழு கூட்டம் ஏப்ரல் 3 முதல் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →