ஜார்க்கண்டில் காட்டு யானை தாக்கியதில் இதுவரை 16 பேர் உயிரிழந்த நிலையில், ராஞ்சி மாவட்ட நிர்வாகம் மாநில தலைநகரின் இட்கி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துவரும் நிலையில், கடந்த 12 நாள்களில் ஜார்க்கண்டின் ஐந்து மாவட்டங்களில் இதுவரை 16 பேரின் உயிரை எடுத்துள்ளது. ஹசாரிபாக், ராம்கர், சத்ரா, லோஹர்தகா மற்றும் ராஞ்சி மாவட்டங்களில் இருந்து இறப்புகள் பதிவாகியுள்ளன.
லோஹர்டகாவில் திங்களன்று காட்டு யானை ஒன்று ஐந்து பேரை தாக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குடுவில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழந்தார். மேலும் இட்சி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கிராமத்தில் 4 பேர் யானை தாக்கி உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் இட்கி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த தடை உத்தரவை அனைத்து மக்களும் பின்பற்றுமாறும், மீறினால் நடவடிக்கை எடுக்கவும் ராஞ்சி வனத்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக யானைக் கூட்டத்தில் இருந்து பிரிந்துவரும் ஒற்றை யானை என்ன செய்வதென்று தெரியாமல் குடியிருப்புக்குள் புகுந்து நாசப்படுத்தும். அதை மக்கள் அடித்து விரட்டிவிடுவர். இருப்பினும் இந்த யானையின் தாக்குதலுக்கு என்ன காரணமென அறிய முடியவில்லை என வனத்துறையினர் கூறுகின்றனர்.
தற்போதைய சூழலில் பயிற்சி பெற்ற வனத்துறையினர் களத்தில் உள்ளதாகவும், தேவைப்பட்டால் கும்கி யானை இறக்கவும் திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.