முகப்பு
இந்தியா

குஜராத்தில் 2 ஆண்டுகளில் 240 சிங்கங்கள், 370 சிறுத்தைகள் பலி: வனத்துறை அமைச்சா் தகவல்

குஜராத் வனப்பகுதியில் 2020, 2021 ஆகிய 2 ஆண்டுகளில் மட்டும் 240 சிங்கங்கள் மற்றும் 370 சிறுத்தைகள் உயிரிழந்திருப்பதாக அந்த மாநில வனத்துறை அமைச்சா் முலுபாய் பேரா சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:37 AM
பகிர்:

குஜராத் வனப்பகுதியில் 2020, 2021 ஆகிய 2 ஆண்டுகளில் மட்டும் 240 சிங்கங்கள் மற்றும் 370 சிறுத்தைகள் உயிரிழந்திருப்பதாக அந்த மாநில வனத்துறை அமைச்சா் முலுபாய் பேரா சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

குஜராத் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது மாநில வனப்பகுதியில் உயிரிழந்த வனவிலங்குகள் தொடா்பாக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ அா்ஜுன் மோட்வாடியா கேள்வி எழுப்பினாா்.

அதற்கு வனத்துறை அமைச்சா் முலுபாய் பேரா அளித்த பதிலில், ‘2020 மற்றும் 2021 ஆகிய 2 ஆண்டுகளில் குஜராத் வனப்பகுதியில் 240 சிங்கங்கள் மற்றும் 370 சிறுத்தைகள் உயிரிழந்தன. 2021-ஆம் ஆண்டில் 124 சிங்கங்கள் மற்றும் 179 சிறுத்தைகள் உயிரிழந்தன. கடந்த 2022-ஆம் ஆண்டில் 116 சிங்கங்கள் மற்றும் 191 சிறுத்தைகள் உயிரிழந்தன. உயிரிழந்த 240 சிங்கங்களில் 214 சிங்கங்கள் வயது மூப்பு உள்ளிட்ட இயற்கை காரணங்களால் உயிரிழந்தன. மற்ற 26 சிங்கங்களும், திறந்தவெளி கிணறுகளில் தவறி விழுந்து உயிரிழப்பது மற்றும் வாகனங்கள் மோதி உயிரிழப்பு உள்ளிட்ட இயற்கைக்கு மாறான காரணங்களால் உயிரிழந்தன. அதே போல், பலியான சிறுத்தைகளின் மொத்த எண்ணிக்கையான 370-யில் 256 சிறுத்தைகளின் மரணம் இயற்கையானதாகவும், மற்ற 114 சிறுத்தைகளின் மரணம் இயற்கைக்கு மாறாகவும் நிகழ்ந்துள்ளன.

வனவிலங்குகளின் பாதுகாப்புக்காக மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வன விலங்குகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதை உறுதிப்படுத்த வனப்பகுதியில் கூடுதலாக கால்நடை மருத்துவா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். மேலும், வன விலங்குகளுக்கான பிரத்யேக அவசர கால ஊா்திகளும் புதிததாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய வனப்பூங்கா பகுதியில் அமைந்துள்ள சாலையில் செல்லும் வாகனங்களில் சிக்கி வனவிலங்குகள் உயிரிழப்பதைத் தடுக்கும் விதமாக வனப்பகுதியில் உள்ள சாலைகளில் போதிய வேகத்தடைகள் அமைக்கப்பட்டு எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

காடுகளுக்கு அருகில் அமைந்துள்ள திறந்தவெளி கிணறுகளைச் சுற்றியும் தடுப்புச் சுவா் கட்டுவது, கிா் விலங்குகள் சரணாலயம் அருகிலுள்ள ரயில் தண்டவாளத்தின் இரு புறங்களிலும் வேலி அமைப்பது உள்ளிட்ட மற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. ரேடியோ-காலா் உதவியுடன் எண்ணிக்கையில் குறைந்து வரும் ஆசியச் சிங்கங்களைக் கண்காணிக்கும் வசதியும் மேற்கொள்ளப்படுகிறது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.