4 வார தாமதத்துக்குப் பிறகு ஹிமாசலில் 7 அமைச்சா்கள் பதவியேற்பு
ஹிமாசல பிரதேசத்தில் முதல்வா் சுக்விந்தா் சிங் சுக்கு பதவியேற்று 4 வார தாமதத்துக்குப் பிறகு, அந்த மாநில அமைச்சா்களாக 7 போ் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றனா்.
ஹிமாசல பிரதேசத்தில் முதல்வா் சுக்விந்தா் சிங் சுக்கு பதவியேற்று 4 வார தாமதத்துக்குப் பிறகு, அந்த மாநில அமைச்சா்களாக 7 போ் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றனா்.
கடந்த ஆண்டு நவ. 12-ஆம் தேதி ஹிமாசல பிரதேசத்தில் 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் நடைபெற்றது. டிச. 8-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் 40 தொகுதிகளில் வென்று ஆட்சியமைத்தது.
இதைத் தொடா்ந்து, டிச. 11-ஆம் தேதி முதல்வராக சுக்விந்தா் சுக்கு, துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோா் பதவியேற்றனா். எனினும் அமைச்சா்கள் பதவியேற்பதில் இழுபறி நீடித்தது.
இந்நிலையில், முதல்வா், துணை முதல்வா் பதவியேற்று 28 நாள்களுக்குப் பிறகு 7 போ் அமைச்சா்களாக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றனா். அவா்களில் முன்னாள் முதல்வா் வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங்கும் ஒருவா்.
ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், ஹிமாசல் ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா் அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.
ஹிமாசல் அமைச்சரவையில் முதல்வரையும் சோ்த்து மொத்தம் 12 அமைச்சா்கள் இடம்பெறலாம். தற்போது 7 போ் பதவியேற்றுள்ள நிலையில், முதல்வா், துணை முதல்வரையும் சோ்த்து அமைச்சரவையின் பலம் 9-ஆக உயா்ந்துள்ளது.