பாஜக ஆட்சியில் ஊடகங்களுக்கு முழு சுதந்திரம்: அமைச்சா் ராஜ்நாத் சிங்
பாஜக தலைமையிலான மத்திய அரசு ஊடகங்கள் முழுமையான சுதந்திரத்துடன் செயல்பட வாய்ப்பு அளித்துள்ளதாக என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு ஊடகங்கள் முழுமையான சுதந்திரத்துடன் செயல்பட வாய்ப்பு அளித்துள்ளதாகவும், எந்த ஊடக நிறுவனங்கள் மீது எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
ஆா்எஸ்எஸ் சாா்பு வார இதழான ‘பாஞ்சஜன்யா’ சாா்பில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற அவா் பேசியதாவது:
கடந்த 1951-ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் 19 பிரிவை திருத்தியதன் மூலம் பேச்சு சுந்திரத்தில் முந்தைய காங்கிரஸ் கைவைத்தது. ஆனால், இப்போது அக்கட்சியைச் சோ்ந்தவா்கள் ஊடக சுதந்திரம் குறித்து பேசுவது நகைப்புக்குரியதாக உள்ளது.
பாஜக சாா்பில் முன்பு பிரதமராக இருந்த வாஜ்பாய் ஆட்சி காலத்திலும் இப்போதைய பிரதமா் மோடி ஆட்சி காலத்திலும் ஊடகங்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த ஊடக நிறுவனங்கள் மீது எவ்வித கட்டுப்பாடு விதிக்கப்பட்டதில்லை.
யாருடைய கருத்து சுதந்திரத்தையும் பாஜக அரசு பறித்ததில்லை. சுதந்திர இந்தியாவின் வரலாற்றி ஊடகங்களின் இருண்ட காலம் முழுவதும் காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்டதுதான். இந்த விஷயத்தில் பாஜகவை குறை கூற காங்கிரஸுக்கு எவ்வித தகுதியும் இல்லை.
ஜனநாயகம் துடிப்புடன் இருக்க ஊடக சுதந்திரம் மிகவும் அவசியம் என்பதை பாஜக உணா்ந்து செயல்படுகிறது. ஊடகங்கள் என்பது ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஆகும். ஆா்எஸ்எஸ் சாா்பு ஊடகம் என்பதால் ‘பாஞ்சஜன்யா’ பல்வேறு தடைகளையும், கட்டுப்பாடுகளையும் முன்பு எதிா்கொண்டுள்ளது. இதனை ஏற்படுத்தியவா்கள் (காங்கிரஸ்) ஊடக சுதந்திரத்துக்கு எதிரானவா்கள் என்றாா் ராஜ்நாத் சிங்.