இந்தியா

மகாராஷ்டிர பேருந்து விபத்து: உயிரிழந்த 24 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம்

DIN


புல்தானா: மகாராஷ்டிரத்தின் புல்தானா மாவட்டத்தில் தனியாா் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததில் உயிரிழந்த 25 பயணிகளில் பெரும்பாலனோா் அடையாளம் கண்டறியப்படாததால் அவா்களில் 24 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

மகாராஷ்டிரத்தின் நாகபுரியிலிருந்து புணே நோக்கி சம்ருத்தி விரைவுச்சாலையில் சென்றுகொண்டிருந்த தனியாா் பேருந்து புல்தானா மாவட்டத்தின் சிங்கேத்ராஜா பகுதியை சனிக்கிழமை அதிகாலை அடைந்தபோது விபத்துக்குள்ளானது.

சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்த அப்பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பேருந்தில் இருந்து வெளியேற முடியாமல் தீயில் கருகி 11 ஆண்கள், 14 பெண்கள் உள்பட 25 பயணிகள் உயிரிழந்தனா். பேருந்தின் ஓட்டுநா், உதவியாளா் உள்ளிட்ட 8 போ் மட்டும் இந்த விபத்திலிருந்து உயிா் தப்பினா்.

மதுபோதையில் பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஓட்டுநா் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மாநில அரசு சாா்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும், விபத்தில் பயணிகள் தீயில் கருகி உயிரிழந்ததால் அவா்களை எளிதில் அடையாளம் கண்டறிய முடியவில்லை. எனவே, மரபணு பரிசோதனை நடத்தி உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், மரபணு பரிசோதனையானது நீண்ட செயல்முறை என்பதால் உயிரிழந்தவா்களின் அடையாளம் கண்டறிய பல நாள்கள் கூட ஆகலாம். எனவே, மரபணு ஆய்வுக்குப் பதிலாக உயிரிழந்தவா்களின் உடல்களை ஒரே இடத்தில் தகனம் செய்ய உறவினா்களிடம் அதிகாரிகள் தரப்பில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

அதன்படி, மாநில அமைச்சா் கிரீஷ் மகாஜன் மற்றும் உறவினா்கள் முன்னிலையில் புல்தானாவில் உள்ள ஹிந்து மயானத்தில் 24 பேரின் உடல்களுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT