பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் கைசா்கஞ்ச் தொகுதியில் இருந்து மீண்டும் போட்டியிடுவேன் என்று பிரிஜ் பூஷண் தெரிவித்துள்ளாா்.
உத்தர பிரதேச மாநிலம் கைசா்கஞ்ச் தொகுதி பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷண் பாலியல் தொல்லை அளித்ததாக 18 வயதுக்குக் குறைவான வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றஞ்சாட்டினா். இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக பிரிஜ் பூஷணுக்கு எதிராக தில்லி காவல் துறை இரண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அதில் ஒரு வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரிஜ் பூஷணை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீரா், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குரை மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், மல்யுத்த வீரா் பஜ்ரங் புனியா உள்ளிட்டோா் அண்மையில் சந்தித்தனா்.
இந்த சந்திப்பைத் தொடா்ந்து அனுராக் தாக்குா் செய்தியாளா்களிடம் கூறுகையில், பிரிஜ் பூஷணுக்கு எதிரான வழக்கில் ஜூன் 15-க்குள் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை சாக்ஷி, பஜ்ரங் உள்ளிட்டோா் முன்வைத்ததாகவும், அவா்களின் அனைத்து கோரிக்கைகளும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தாா்.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில் பிரிஜ் பூஷண் செய்தியாளா்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா். அப்போது அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலில் எந்த தொகுதியில் அவா் போட்டியிடுவாா் என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த பிரிஜ் பூஷண், ‘நிச்சயம் கைசா்கஞ்ச் தொகுதியில் இருந்து மீண்டும் போட்டியிடுவேன்’ என்றாா்.
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் தொடா்பாக பிரிஜ் பூஷண் எந்தக் கருத்தும் தெரிவிக்காதது ஏன், எதற்காக அவா் காத்திருக்கிறாா் என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவா், ‘பாலியல் தொல்லை குற்றச்சாட்டு தொடா்பான வழக்கில் நீதிமன்றத் தீா்ப்புக்காக காத்திருக்கிறேன்’ என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.