அந்நிய மண்ணில் இந்திய ஜனநாயகத்தை அவமதிக்க ராகுல் காந்தி முயற்சி மேற்கொண்டுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத், தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராகுல் காந்தி பிரிட்டனில் தனது பேச்சுகள் மூலம் இந்திய ஜனநாயகம், அரசியல் அமைப்பு, நாடாளுமன்றம், நீதி பரிபாலன அமைப்பு, பாதுகாப்பு கட்டமைப்பு ஆகியவற்றை அவமதிக்க முயன்றுள்ளார். அவர் மாவோயிஸ்ட் சித்தாந்தத்தின் பிடியில் சிக்கியுள்ளார்.
அவமானகரமான பொய்களைப் பரப்பியதன் மூலம் இந்தியாவை அவமதிக்க பிரிட்டன் நாடாளுமன்ற அமைப்பை ராகுல் காந்தி தவறாகப் பயன்படுத்தியதை எங்கள் கட்சி எதிர்க்கிறது. ராகுலின் கருத்துகளை உரிய வகையில் மறுக்க வேண்டியது அவசியமாகிறது.
அவரை இந்திய மக்கள் ஆதரிக்காமலும் அவர் தேர்தல்களில் தோல்வி அடையாமலும் இருந்திருந்தால் அந்நிய மண்ணில் அவர் தனது விரக்தியை வெளிப்படுத்தி பொய்களைக் கூறியிருக்க மாட்டார்.
ராகுலின் கருத்துகள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிலளிக்க வேண்டும். கார்கே ஒரு கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக தன்னைக் கருதினால் அவர் இதைச் செய்ய வேண்டும்.
ராகுல் காந்தியின் பொறுப்பற்ற கருத்துகளை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறதா இல்லையா என்பது குறித்து கார்கேயும் சோனியா காந்தியும் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்.
வெளிநாட்டில் இருந்தபடி இந்தியர்களை விமர்சித்ததன் மூலம் ராகுல் காந்தி அனைத்து நாடாளுமன்ற மரபுகள், அரசியல் நேர்மை ஆகியவற்றை மறந்து விட்டார். இந்திய மக்கள் அவர் சொல்வதைக் கேட்பதும் இல்லை; அவர் சொல்வது புரிவதும் இல்லை. அதனால்தான் ராகுல் வெளிநாடுகளுக்குச் சென்று, இந்திய ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாகக் கூறுகிறார். இது மிகவும் அவமானகரமாகும்.
இந்தியாவில் ஐரோப்பாவும் அமெரிக்காவும் தலையிட வேண்டும் என்று ராகுல் காந்தி கோருகிறார். தனது விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகள் தலையிடக் கூடாது என்ற இந்தியாவின் கருத்தொற்றுமைக்கு எதிராக அவர் செயல்படுகிறார். இந்தியாவின் உள்விவகாரங்களில் ஐரோப்பாவும் அமெரிக்காவும் தலையிட வேண்டும் என்று கூறியதன் மூலம் ராகுல் காந்தி நமது நாட்டுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த முயன்றுள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பை ராகுல் விமர்சித்ததும் தவறானது. அந்த அமைப்பு சமூகத்துக்கும் நாட்டுக்கும் சேவையாற்றுகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தமும் தாக்கமும் தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளன. ராகுல் காந்தியின் கட்சி (காங்கிரஸ்) சுருங்கி வருகிறது. 2024 தேர்தலில் அக்கட்சி மேலும் சுருங்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.