கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் காங்கிரஸ்தான் எதிரி என்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.
இந்தியாவின் நற்பெயருக்கு உலக அளவில் அந்தக் கட்சி களங்கம் ஏற்படுத்த முயல்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
தேர்தல் பிரசாரத்துக்காக கர்நாடகம் வந்துள்ள பிரதமர் மோடி, தென்கன்னட மாவட்டம், முல்கி தொகுதியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:
கர்நாடகத்தின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் எதிரி காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் ஆட்சி செய்தபோது முதலீட்டாளர்கள் இங்கு முதலீடு செய்யவில்லை. தீவிரவாதத்துக்கு காரணமானவர்களை காங்கிரஸ் பாதுகாத்தது. குறிப்பிட்ட சமுதாயத்தைத் திருப்திப்படுத்தும் சூழ்ச்சி அரசியலை காங்கிரஸ் செய்துவந்தது. அக்கட்சியின் தனித்துவ அடையாளமும் அதுதான்.
இத்தகைய கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர நீங்கள் அனுமதிப்பீர்களா? காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகம் அழிவைச் சந்திக்க அனுமதிப்பீர்களா? நாட்டில் எந்த மாநிலம் எல்லாம் அமைதியையும் வளர்ச்சியையும் விரும்புகிறதோ, அந்த மாநில மக்கள் முதலில் செய்யும் வேலை காங்கிரûஸ அதிகாரத்தில் இருந்து அகற்றுவதுதான்.
பிரித்தாளும் கொள்கை: சமுதாயத்தில் அமைதி நிலவினாலோ அல்லது நாடு முன்னேறினாலோ காங்கிரஸ் கட்சியால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாது. பல காலமாக மக்களிடையே பிரித்தாளும் கொள்கையை அடித்தளமாகக் கொண்டு காங்கிரஸ் அரசியல் செய்கிறது.
தேசத்தின் பாதுகாப்புப் படைகளை நாட்டு மக்கள் கெளரவித்து வருகின்றனர். ஆனால், நமது பாதுகாப்புப் படைகளையும் வீரர்களையும் காங்கிரஸ் அவமதித்தது, தூற்றியது.
நாட்டின் ஜனநாயகத்தை உலகமே பாராட்டும் வேளையில் அதற்கு எதிராக உலகம் முழுவதும் சென்று நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் பணியை காங்கிரஸ் செய்கிறது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரிட்டன் உள்பட உலகின் அனைத்து மூலைமுடுக்குகளிலும் இந்தியாவுக்கு பாராட்டு கிடைக்கிறது. இதற்கு மோடி மட்டும் காரணமில்லை; மாறாக, மக்கள் அளிக்கும் வாக்குகளால் இது சாத்தியமானது.
மக்களின் பலம் அவர்களின் வாக்குகள்தான். மக்களின் வாக்குகள்தான் மத்தியில் வலிமையான, நிலையான ஆட்சியைத் தந்தது.
அதுபோல தொழில், வேளாண்மை வளர்ச்சி, மீன்வளம், துறைமுகங்களில் கர்நாடகத்தை நாட்டின் முதல் மாநிலமாக மாற்ற பாஜக விரும்புகிறது. அதற்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
ஆனால், இதற்கு எதிர்மறையாக தில்லியில் அமர்ந்திருக்கும் தங்கள் அரச குடும்பத்தினரின் முதல் ஏடிஎம் இயந்திரமாக கர்நாடகத்தை மாற்ற காங்கிரஸ் கட்சி முயல்கிறது.
அந்தக் கட்சிதான் அனைத்துத் திட்டங்களுக்கும் 85 சதவீத கமிஷன் எடுத்துக்கொள்கிறது; காங்கிரûஸ ஆட்சி செய்ய அனுமதித்தால் கர்நாடகத்தை 10 ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்திவிடும். அத்துடன் படுகுழியில் தள்ளிவிடும். எனவே, காங்கிரஸ் மீது கர்நாடக மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மஜதவும் காங்கிரûஸப்போலதான்.
புத்தொழில்முனைவோர்: உலக அளவில் புத்தொழில் முனைவோருக்கு ஏற்ற சூழல் நிலவும் 3-ஆவது பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. நாட்டில் தற்போது ஒரு லட்சம் புத்தொழில்முனைவோர் உள்ளனர். புத்தொழில்முனைவோருக்கு ஏற்ற தொழில்சூழலை வழங்கும் கொள்கைகளை பாஜக அரசு வகுக்கிறது.
எதிர்காலத்தில் லட்சக்கணக்கான இளம் புத்தாக்க வல்லுநர்களை உருவாக்கவும் பாஜக திட்டமிட்டு வருகிறது.
பாஜக ஆட்சிக் காலத்தில் நம்மை ஆட்சி செய்த பிரிட்டனை பின்னுக்குத் தள்ளிவிட்டு, உலகின் 5-ஆவது பொருளாதார சக்திபடைத்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இதையும் தாண்டி உலக பொருளாதார சக்தி படைத்த நாடுகளில் 3-ஆவது இடத்தை இந்தியா அடைய உங்கள் ஆதரவு தேவை. கர்நாடக மக்களின் ஆதரவு தேவை.
நாடும் உலகமும் போற்றி, மதிக்கத்தக்க வலுவான, நிலையான அரசு கர்நாடகத்தில் அமைய அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.