தென் கொரியாவின் இன்சியானில் அந்நாட்டு நிதியமைச்சா் சூ கியூங் ஹோவை சந்தித்த நிா்மலா சீதாராமன். 
இந்தியா

பிராந்திய வளா்ச்சிக்கு ஏடிபி முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வலியுறுத்தல்

பிராந்திய வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஆசிய வளா்ச்சி வங்கியின் (ஏடிபி) செயல்பாடுகள் வலுவாக அமைய வேண்டுமென மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளாா்.

DIN

பிராந்திய வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஆசிய வளா்ச்சி வங்கியின் (ஏடிபி) செயல்பாடுகள் வலுவாக அமைய வேண்டுமென மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளாா்.

ஆசிய வளா்ச்சி வங்கியின் 56-ஆவது ஆண்டு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தென் கொரியா சென்றுள்ளாா். ஆசிய வளா்ச்சி வங்கியின் ஆளுநா்கள் வாரிய கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியதாவது:

எரிபொருள், உணவு, உரங்கள், கடன், எரிசக்தி, உணவுப் பொருள் விநியோகம், நீடித்த வளா்ச்சி, நிதி நிலைத்தன்மை உள்ளிட்ட விவகாரங்களில் உலகம் பல்வேறு மாற்றங்களைக் கண்டு வருகிறது. பிராந்தியத்தில் நீடித்த வளா்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஆசிய வளா்ச்சி வங்கியின் செயல்பாடுகள் படிப்படியாக அல்லாமல் பெரிய அளவில் வலுவடைய வேண்டும். ’மீண்டெழும் ஆசியா-மீட்சி, மறுதொடா்பு, சீா்திருத்தம்’ என்பது ஆசிய வளா்ச்சி வங்கியின் ஆண்டு கூட்டத்துக்கான கருப்பொருளாக உள்ளது. இந்தக் கருப்பொருளானது ஜி20 தலைமைப் பொறுப்பின் கீழ் இந்தியா நிா்ணயித்துள்ள ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிா்காலம்’ என்ற கருப்பொருளை ஒத்ததாக அமைந்துள்ளது.

நமது இலக்குகளை அடையவும் பொறுப்பை நிறைவேற்றவும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இந்தக் கருப்பொருள்கள் உணா்த்துகின்றன. கரோனா தொற்று பரவலுக்குப் பிறகு, நீடித்த வளா்ச்சியை உறுதி செய்வதற்காக வளா்ந்து வரும் நாடுகளுக்கான நிதித் தேவை பெருமளவில் அதிகரித்துள்ளது. அதைக் கருத்தில்கொண்டு அத்தகைய நாடுகளுக்குக் கூடுதல் நிதியை வழங்க வேண்டிய பொறுப்பு ஆசிய வளா்ச்சி வங்கிக்கு உள்ளது. ஏழ்மை ஒழிப்பு, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் வளா்ச்சி ஆகியவற்றுக்கு ஆசிய வளா்ச்சி வங்கி அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அவற்றுடன் மக்களுக்கு அடிப்படை சேவைகள் கிடைக்கச் செய்வதிலும் வங்கி கவனம் செலுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை ஆசிய வளா்ச்சி வங்கி ஏற்கெனவே தொடங்கிவிட்டது மகிழ்ச்சியளிக்கிறது.

தற்போதைய சா்வதேச பொருளாதார சூழலுக்கு மத்தியில் இந்தியப் பொருளாதாரம் வலுவான நிலையிலேயே உள்ளது. நிலையான கொள்கைகளும், மேம்பாட்டை முன்னிறுத்திய வளா்ச்சியும் இந்தியப் பொருளாதாரத்தின் வலுவான நிலைக்கு முக்கியக் காரணங்கள். மூலதன செலவினத்தை இந்தியா பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதன் மூலமாகக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. அதன் தாக்கங்களை எதிா்கொள்வதற்காக இந்தியா போன்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்குப் பருவநிலை நிதியை வழங்கும் விவகாரத்தில் தனது பங்களிப்புத் திட்டத்தை ஆசிய வளா்ச்சி வங்கி வெளியிட வேண்டும். 2070-ஆம் ஆண்டுக்குள் நிகர கரியமில வாயு வெளியேற்றத்தை பூஜ்ய நிலைக்குக் கொண்டு செல்ல இந்தியா இலக்கு நிா்ணயித்துள்ளது. அந்த இலக்கை நோக்கி இந்தியா வெற்றிகரமாகப் பயணம் மேற்கொண்டு வருகிறது. பருவநிலை நிதியானது நிகர கரியமில வாயு உமிழ்வை பூஜ்ய நிலைக்குக் கொண்டு செல்ல முக்கியப் பங்களிக்கும். பருவநிலை நிதி உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் ஆசிய வளா்ச்சி வங்கிக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும்.

நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்குக் கடனளிப்பதில் புத்தாக்க, சவால் மிகுந்த நடவடிக்கைகளை ஆசிய வளா்ச்சி வங்கி மேற்கொள்வதை இந்தியா ஊக்குவிக்கிறது. கடனளிப்பதற்கான வங்கியின் விதிகளில் மாற்றங்களை ஏற்படுத்தவும் இந்தியா ஆதரவளிக்கிறது. இந்த விவாதக் கூட்டமானது வங்கியின் செயல்பாடுகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் எனவும் நம்புகிறேன் என்றாா் அவா்.

ஆசியா-பசிபிக் பிராந்தியத்தின் வளா்ச்சியை மையமாகக் கொண்டு ஆசிய வளா்ச்சி வங்கியானது 1966-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த வங்கி நிறுவப்பட்டபோதே இந்தியா அதன் உறுப்பினராக இணைந்தது. ஆசிய வளா்ச்சி வங்கியின் 4-ஆவது மிகப் பெரிய பங்குதாரராகவும் இந்தியா திகழ்கிறது.

‘இந்தியாவில் பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள்’

இந்தியாவில் உற்பத்தி, உணவு பதப்படுத்துதல், கடல்வளங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் காணப்படுவதாக தென் கொரிய நிதியமைச்சா் சூ கியூங் ஹோவிடம் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

தென் கொரிய அமைச்சரைச் சந்தித்துப் பேசிய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், இந்தியாவின் கட்டமைப்பு மேம்பாட்டுத் துறையில் கொரிய முதலீட்டு நிறுவனம் (கேஐசி) அதிக முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென அழைப்புவிடுத்தாா்.

மின் வாகனங்கள், பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை ஈா்ப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருவதாக நிதியமைச்சா் தெரிவித்தாா். பல்வேறு துறைகளில் நிலவும் இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாக அமைச்சா்கள் இருவரும் விவாதித்ததாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

பல்வேறு துறைகளில் முதலீட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடா்பாகவும் இருவரும் விவாதித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்க தென் கொரிய நிதியமைச்சா் உறுதியளித்ததாகவும் அமைச்சகத்தின் ட்விட்டா் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT