முகப்பு
இந்தியா

அவசரச் சட்டம்: உத்தவ் தாக்கரே, சரத் பவாரை சந்திக்கிறார் கேஜரிவால்

மும்பையில் சரத் பவார், உத்தவ் தாக்கரே ஆகியோரை சந்தித்து மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு எதிராக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆதரவு கோர உள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:58 PM
பகிர்:

மும்பையில் சரத் பவார், உத்தவ் தாக்கரே ஆகியோரை சந்தித்து மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு எதிராக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆதரவு கோர உள்ளார். 

அதன்படி மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தாக்கரேவை மே 24ஆம் தேதியும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் பவாரை மே 25ஆம் தேதியும் மும்பையில் கேஜரிவால் சந்திக்க உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று தலைநகர் தில்லியில் அரவிந்த் கேஜரிவாலை சந்தித்த பிகார் முதல்வர் நிதீஷ்குமார் அவசரச் சட்டத்துக்கு எதிராக தனது ஆதரவை வழங்கினார். இந்நிகழ்வின் போது பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் உடனிருந்தார்.

தில்லியில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி அரசுக்கும் மத்திய பாஜக அரசுக்கும் இடையே அதிகார மோதல் கடந்த 8 எட்டு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதற்குத் தீா்வு காண உச்ச நீதிமன்றத்தில் தில்லி அரசு தொடுத்த வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமா்வு, நிலம், காவல், பொது உத்தரவு ஆகியவை தவிர அனைத்து விவகாரங்களிலும் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசுக்குதான் உரிமை உள்ளது என்று தீா்ப்பளித்தது. 

ஆனால், தில்லி அரசுக்கு அதிகாரிகள் நியமனத்தில் மத்திய அரசு அனுமதி அளிப்பதில்லை என்று தீா்ப்பு வெளியான மறுதினமே உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடுத்தது. இந்நிலையில், யூனியன் பிரதேச உயரதிகாரிகளான ‘டானிக்ஸ்’ பிரிவு குரூப் ஏ அதிகாரிகளின் பணி நியமனம், பணியிட மாற்றம் செய்வதை முடிவு செய்வதற்கான தேசிய தலைநகா் சிவில் சா்வீஸ் ஆணையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது. 

இதில், தில்லி முதல்வா், தலைமைச் செயலா், முதன்மை உள்துறை அமைச்சா் ஆகியோா் இடம்பெறுவாா்கள். பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தில்லி அரசின் பணி நியமன அதிகாரத்தை குறைக்கும் வகையில் இந்த அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாகவும் இது உச்ச நீதிமன்ற அவமதிப்பு என்றும் ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →