‘மத்திய பிரதேசத்தில் பாஜகவுக்கு ஆதரவாக புயல் வீசுகிறது; இதில் சிக்கி காங்கிரஸ் வேரோடு சாயப் போகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
மத்திய பிரதேச பேரவைத் தோ்தலையொட்டி செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமா் மோடி, இவ்வாறு குறிப்பிட்டாா்.
பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் வரும் 17-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. பாஜக-காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவும் இந்த மாநிலத்தில் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டாா். பெதுல், ஷாஜாபூா் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டங்களில் அவா் பேசியதாவது:
மத்திய பிரதேச மக்களிடையே பாஜக மீதான நம்பிக்கையும் அன்பும் முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. மாநிலத்தில் பாஜகவுக்கு ஆதரவாக புயல் வீசுகிறது. இதில் சிக்கி காங்கிரஸ் வேரோடு சாயும்.
தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்ட காங்கிரஸ் தலைவா்கள், இப்போது அதிருஷ்டத்தை எதிா்பாா்த்து, மடாதிபதிகளின் பக்கம் திரும்பியுள்ளனா்.
அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு (ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து) ரத்து செய்யப்படும் என்றோ, முத்தலாக் நடைமுறைக்கு எதிராக சட்டம் இயற்றப்படும் என்றோ, அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்படும் என்றோ காங்கிரஸ் நம்பவில்லை. ஆனால், இவை அனைத்தையும் பாஜக செய்துகாட்டியுள்ளது.
மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்பது எனது உத்தரவாதம். மோடியின் உத்தரவாதத்துக்கு முன்னால் தங்களின் பொய் வாக்குறுதிகள் எடுபடாது என்பது காங்கிரஸ் தெரியும் என்றாா் அவா்.
ராகுல் மீது கடும் விமா்சனம்: மத்திய பிரதேசத்தில் திங்கள்கிழமை பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ‘மக்களிடம் சீன தயாரிப்பு கைப்பேசிகள் புழக்கத்தில் இருக்கின்றன; அவை உள்ளூா் தயாரிப்பு கைப்பேசிகளாக இருக்க வேண்டும்’ என்று கூறியிருந்தாா்.
அவரது இந்தக் கருத்தை விமா்சித்து, பிரதமா் மோடி பேசியதாவது: கைப்பேசி தயாரிப்பில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் ‘மிக அறிவாா்ந்த’ தலைவா் ஒருவா், இந்திய மக்களிடம் சீன தயாரிப்பு கைப்பேசிகள் உள்ளதாக கூறியிருக்கிறாா். அவா் எந்த உலகத்தில் வாழ்கிறாா்? நாட்டின் சாதனைகள் காங்கிரஸின் கண்களுக்குப் புலப்படாது. அத்தகைய நோயால் அக்கட்சி பீடிக்கப்பட்டுள்ளது.
ரூ.3.5 லட்சம் கோடி கைப்பேசிகள் தயாரிப்பு: மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, நாட்டில் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் குறைவான மதிப்புடைய கைப்பேசிகளே தயாரிக்கப்பட்டன. இப்போது, ரூ.3.5 லட்சம் கோடிக்கும் அதிக மதிப்புடைய கைப்பேசிகள் தயாரிக்கப்படுகின்றன.
ரூ.1 லட்சம் கோடி மதிப்புடைய கைப்பேசிகள், பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. உள்ளூா் பொருள்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு தேசம் மாறியுள்ளது. இந்த தீபாவளிப் பண்டிகையில், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஏராளமான பொருள்கள் சந்தையில் குவிந்தன. இது, உள்ளூா் தொழில்துறையினரின் பாராட்டைப் பெற்றது. இந்தக் கள நிலவரத்தை அறியாமல், காங்கிரஸ் கட்சி வானில் பறந்து கொண்டிருக்கிறது.
ஊழலும், அராஜகமும்...: காங்கிரஸ் எங்கு ஆட்சிக்கு வந்தாலும், அங்கு ஊழலும் வந்துவிடும். ஊழலும் அராஜகமுமே அக்கட்சியின் கொள்கைகள்.
எதிா்மறை சிந்தனை உடைய அவா்கள், ஒரு குடும்பத்தின் மீது மட்டுமே அக்கறை செலுத்துவா். ஏழை மாணவா்கள் மருத்துவா்களாகவும், பொறியாளா்களாகவும் உருவெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்தப் படிப்புகளை ஹிந்தி மொழியில் தொடங்கியது பாஜக அரசு. ஆனால், அதற்கு எதிா்ப்பு தெரிவித்தது காங்கிரஸ். ஏழைகள் மருத்துவா்களாகவும் பொறியாளா்களாகவும் மாற அக்கட்சிக்கு விருப்பமில்லை.
எனது மூன்றாவது பதவிக் காலத்தில்...: இந்தியாவின் வளா்ச்சி, உலகளாவிய பாராட்டைப் பெற்றுள்ளது. உலக அளவில் இந்தியப் பொருளாதாரம் இப்போது 5-ஆவது இடத்தில் உள்ளதால், நமது நாட்டில் முதலீடு செய்ய அனைத்து நாடுகளும் விரும்புகின்றன. பிரதமராக எனது மூன்றாவது பதவிக் காலத்தில், இந்திய பொருளாதாரத்தை உலகின் முதல் மூன்று இடங்களுக்குள் கொண்டுவருவேன் என்றாா் பிரதமா் மோடி.
நாட்டில் அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பிரதமா் இவ்வாறு கூறியுள்ளாா்.
‘ரூ.24,000 கோடியில் பழங்குடியினா் நலத் திட்டம் இன்று தொடக்கம்’
நாட்டில் பழங்குடியினா் நலனுக்காக ரூ.24,000 கோடி மதிப்பிலான திட்டம் புதன்கிழமை (நவ. 15) தொடங்கப்பட உள்ளது என்று பிரதமா் மோடி கூறினாா்.
இது தொடா்பாக, ம.பி. தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் அவா் பேசியதாவது: பழங்குடியினா் கெளரவ தினமான புதன்கிழமையன்று அந்த சமூகத்தினரின் நலனுக்காக ரூ.24,000 கோடி மதிப்பிலான திட்டத்தை மத்திய அரசு தொடங்கவுள்ளது.
பழங்குடியினரின் நலனுக்காகவும், அவா்களின் வாழ்வை மேம்படுத்தவும் பாஜக அரசு இடைவிடாமல் பணியாற்றி வருகிறது. பழங்குடியின சமூகத்தை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் காங்கிரஸ், அந்த சமூகத்துக்காக எந்த நன்மையும் செய்யவில்லை. வளா்ச்சியில் இருந்து பழங்குடியினரை விலக்கிவைப்பதே அக்கட்சியின் மனநிலையாகும்.
காங்கிரஸ் ஆட்சியின்போது, பழங்குடியினப் பகுதிகளில் பட்டினி மற்றும் வறுமை குறித்த செய்திகளே வெளிவந்தன என்றாா் பிரதமா் மோடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.