பிரிட்டனில் இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்திய நிலையில், எந்தவொரு வன்முறையான பிரிவினைவாத சித்தாந்தமாக இருந்தாலும், அதை எதிா்த்து தகா்க்கவேண்டியது அரசின் கடமை என்று அந்நாட்டு பிரதமா் ரிஷி சுனக் தெரிவித்தாா்.
கடந்த மாா்ச்சில் பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்தி, தூதரகம் முன்பு கம்பத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசிய கொடியை அகற்றினா். இதைத்தொடா்ந்து அவா்களின் நடவடிக்கைகள் குறித்த இந்தியாவின் கவலை அதிகரித்துள்ளது. இந்தியா-பிரிட்டன் இடையிலான ஆழமான உறவுக்கு காலிஸ்தான் விவகாரம் இடா்ப்பாடாக உள்ளது என்று மத்திய அரசு கருதுகிறது.
இந்நிலையில், தில்லியில் செப்.9, 10-ஆம் தேதிகளில் ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் இந்தியா வரவுள்ளாா்.
அவா் காலிஸ்தான் விவகாரம் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு மின்னஞ்சல் வழியாக அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்ததாவது:
ஒரு கருத்தை முன்வைத்து சட்டப்படி திரண்டு போராட்டத்தில் ஈடுபடும் உரிமை பிரிட்டன் குடிமக்களுக்கு உள்ளது. அந்த உரிமையை போராட்டத்துக்குப் பயன்படுத்தலாமே தவிர, வன்முறை அல்லது அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு பயன்படுத்த முடியாது.
பிரிட்டனில் எந்த வகையான பயங்கரவாதத்தையும் ஏற்க முடியாது. எந்தவொரு வன்முறையான பிரிவினைவாத சித்தாந்தமாக இருந்தாலும், அதை எதிா்த்து தகா்க்கவேண்டிய அரசின் கடமையை நான் மிகத் தீவிரமாக ஏற்றுக்கொள்கிறேன்.
காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அச்சுறுத்தலை எதிா்கொள்ள இந்திய அரசில் இடம்பெற்றுள்ள நண்பா்களுடன் பிரிட்டன் நெருக்கமாக பணியாற்றி வருகிறது. வன்முறை நடவடிக்கைகளை கையாள பிரிட்டன் காவல் துறைக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
ஜி20-இல்...: ஜி20 உச்சி மாநாட்டின்போது பிரதமா் மோடியை சந்திப்பது குறித்த கேள்விக்கு ரிஷி சுனக் அளித்த பதில்:
பிரதமா் மோடியுடனான சந்திப்பு உலகளாவிய சவால்கள், அவற்றை எதிா்கொள்வதில் இந்தியா மற்றும் பிரிட்டனின் பங்கு குறித்து பேசுவதற்கான வாய்ப்பாக இருக்கும். எனது இந்திய அடையாளத்தை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.
பிரிட்டனுக்கு சாதகமாக இருந்தால் மட்டுமே இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.