இந்தியா

கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதியானது! இருவர் உயிரிழப்பு

DIN

கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இருவர் உயிரிழப்புக்கு நிபா வைரஸ்தான் காரணம் என்று சோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. 

கேரளத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஒருவரும் நேற்று(செப். 11) ஒருவரும் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர். இறந்த இருவரும் தொடர்பில் இருந்துள்ளனர். 

இதற்கு நிபா வைரஸ் காரணமாக இருக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் கருதி உயிரிழந்தவர்களின் மாதிரிகள் புணே ஆய்வகத்துக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டது. இன்று மாலை சோதனை முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் சோதனையில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இத்தகவலை தெரிவித்துள்ளார். மேலும் வைரஸைக் கட்டுப்படுத்த கேரள அரசுடன் இணைந்து மத்திய அரசு செயல்படும் என்றும் இதற்காக மத்திய அரசின் குழு கேரளத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 

முன்னதாக நேற்று இதுதொடர்பாக ஆலோசனை மேற்கொண்ட மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் இன்றும் ஆலோசனை மேற்கொண்டார். 

கடந்த 2018, 2021 ஆம் ஆண்டுகளில் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் தாக்கம் அதிகம் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

நிபா வைரஸ் 

பழம் தின்னும் வௌவால்கள் உடலில் இந்த வைரஸ்கள் உள்ளன. இது நேரடியாக வௌவால்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவலாம். அவற்றின் சிறுநீர், உமிழ்நீர், அவற்றின் கழிவுகள் மூலமாக அல்லது, அவை கடித்த பழங்களை உண்பதாலும் ஏற்படலாம்.

வௌவால்கள் மூலம் குதிரை, நாய், எலி, பூனை, பன்றி என பிற வீட்டு வளர்ப்பு - மனித தொடர்புடைய விலங்குகளுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு அதன்மூலம் மனிதர்களுக்குப் பரவலாம். 

காய்ச்சல் ஏற்பட்ட ஒரு நோயாளியிடமிருந்து, அவருக்கு அருகில் நெருக்கமாக இருக்கும் குடும்பத்தினர், நண்பர்களுக்கும் பரவலாம். நோயாளியின் உடல் திரவங்கள் (உமிழ் நீர், ரத்தம், சிறுநீர்) மூலம் மற்றவர்களுக்கு இந்நோய் பரவலாம். 

காய்ச்சல், தலைவலி, உடல் வலி, அசதி, இருமல், குமட்டல்/வாந்தி, அதையடுத்து மூச்சுத்திணறல், அதிகபட்சமாக மூளை, சிறுமூளை, நரம்பு மண்டலப் பாதிப்புகளால் மரணம் கூட நேரிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

30 கோடி பார்வைகளை கடந்த வைரல் விடியோ...யார் இந்த ராகுல் காந்தி!

70வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய இபிஎஸ்... விஜய், அண்ணாமலை வாழ்த்து!

தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்துள்ளது?

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை!

அன்னையர் நாள்: தலைவர்கள் வாழ்த்து!

SCROLL FOR NEXT