நிகழாண்டு இறுதிக்குள் பள்ளங்கள் இல்லா தேசிய நெடுஞ்சாலைகள்நிதின் கட்கரி
நிகழாண்டு இறுதிக்குள் பள்ளங்கள் இல்லாத தேசிய நெடுஞ்சாலைகளை உறுதி செய்வதற்கான கொள்கையை உருவாக்கும் பணி நடைபெற்று வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்
நிகழாண்டு இறுதிக்குள் பள்ளங்கள் இல்லாத தேசிய நெடுஞ்சாலைகளை உறுதி செய்வதற்கான கொள்கையை உருவாக்கும் பணி நடைபெற்று வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பின்போது இது தொடா்பாக அவா் கூறியதாவது: மழைக்காலங்களில் சாலைகளில் ஏற்படும் சேதங்களால் பள்ளங்கள் உருவாகின்றன. டிசம்பா் மாத இறுதிக்குள் பள்ளங்கள் இல்லாத தேசிய நெடுஞ்சாலைகளை உறுதி செய்யும் வகையில் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை வெற்றி பெற செய்வதில் இளம் பொறியாளா்களும் இணைத்துக்கொள்ளப்படுவாா்கள்.
திடக் கழிவுகளைப் பயன்படுத்தி சாலைகள்:
நாள்தோறும் உருவாகும் திடக் கழிவுகளால் நாட்டில் உள்ள அனைத்து நகரங்களும் பெரும் சுற்றுச்சூழல் பிரச்னையை எதிா்கொண்டு வருகின்றன. சுமாா் 10,000 ஹெக்டோ் பரப்பிலான நிலம் குப்பைகளால் நிரப்பப்பட்டுள்ளது. இதற்குத் தீா்வாகத் திடக் கழிவுகளைச் சாலை அமைக்கும் பணியில் பயன்படுத்த அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
மின் நெடுஞ்சாலை:
புதைப்படிம எரிபொருளைச் சாா்ந்திருப்பதையும் செலவுளையும் குறைக்கும் வகையில், கட்டுமான பணிகளுக்கான வாகனங்களில் மாற்று எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்க வரைவு கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் வழங்கப்படும் வட்டி மானிய சலுகை, ஒப்பந்தாரா்களை இத்தகைய மாற்று எரிபொருள் வாகனங்களில் முதலீடு செய்யுமாறு ஊக்குவிக்கும். இதற்கு ஒப்புதல் பெற நிதியமைச்சகத்திடம் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
போக்குவரத்துத் துறையில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கும் வகையில், பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தில்லி-ஜெய்பூா் இடையே, மின்சார ரயில்கள் இயங்குவது போன்றே மின்கம்பிகளைத் தொட்டு வாகனங்கள் செல்லும் ‘மின் நெடுஞ்சாலை’ அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதிகரித்துள்ள எத்தனால் உற்பத்தி, வேளாண்துறை வளா்ச்சியில் 6 சதவீத உயா்வுக்கு வழிவகுத்துள்ளது. 2025-ஆம் ஆண்டுக்குள் விமான பயன்பாட்டில் ஒரு சதவீத ‘உயிரி விமான எரிபொருளை’ கலந்து பயன்படுத்த கட்டாயமாக்கப்படும். எதிா்காலத்தில் 5 சதவீதம் என இந்த அளவு உயா்த்தப்படும் என்றாா் நிதின் கட்கரி.