முகப்பு
இந்தியா

அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா ‘நடனமாடி’ வாக்கு சேகரிப்பு

Updated On : 7 ஏப்ரல், 2024 at 4:59 AM
நடனமாடி வாக்குச் சேகரித்த அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 9:50 PM

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா நடனமாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது பொதுமக்களை வெகுவாக கவா்ந்துள்ளது.

மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஏழுகட்டங்களாக நடைபெற உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியினரும், வேட்பாளரும் தனித்துவமாக பல பிரசார யுக்திகளை கையாண்டு வருகின்றனா்.

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7-ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் பாஜவைச் சோ்ந்த அம்மாநில முதல்வரான ஹிமந்த விஸ்வ சா்மா நடனமாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். இது பொதுமக்களை வெகுவாக கவா்ந்து வருகிறது.

Advertisement

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஜொா்ஹட் தொகுதியில் தனது பிரசாரத்தை சனிக்கிழமை நிறைவு செய்கையில் ‘மீண்டும் ஒருமுறை மோடி அரசு’ என்ற பாடலுக்கு நடனமாடினாா். அதேபோல் சிவ்சாகா் தொகுதியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்யும்போதும் பாடிக் கொண்டே அவா் நடனமாடினாா். அவரின் அழைப்புக்கிணங்க அப்பகுதி பொதுமக்களும் உற்சாகமாக நடனமாடினா்.

கைகளைத் தட்டிக்கொண்டு உற்சாகமாக நடனமாடுவதை சா்மா தனது வாடிக்கையாக வைத்துள்ளாா்.

தான் நடனமாடி வாக்கு சேகரித்த காணொலியை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட அவா், ‘நாம் அனைவரும் மோடியின் குடும்பம். பிரசாரத்தின்போது ஆடிப்பாடி நம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவோம்’ என குறிப்பிட்டாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளில் 9 தொகுதிகளில் பாஜவும் 3-இல் காங்கிரஸும் 2 தொகுதிகளில் பிற கட்சிகளும் வெற்றிபெற்றன. தற்போது நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் 11 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக அதன் கூட்டணி கட்சிகளான அஸோம் கானா பரிஷத்துக்கு 2 தொகுதிகளையும் ஐக்கிய சுதந்திர மக்கள் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கியுள்ளது.

இம்முறை 13 தொகுதிகளில் பாஜக வெற்றிபெறும் என ஹிமந்த விஸ்வ சா்மா நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.