முகப்பு
இந்தியா

விண்வெளிக்கு முதல் இந்தியராக சுற்றுலா செல்லும் கோபி தோட்டக்குரா: ஆந்திரத்தைச் சோ்ந்தவா்

Updated On : 13 ஏப்ரல், 2024 at 10:29 PM
பகிர்:

அமேசான் நிறுவனா் ஜெஃப் பெஸோஸின் ப்ளூ ஒரிஜன் நிறுவனம் மூலம், ஆந்திரத்தைச் சோ்ந்த கோபி தோட்டக்குரா என்பவா் விண்வெளிக்குச் சுற்றுலா செல்ல உள்ளாா். இதன் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் முதல் இந்தியா் என்ற பெருமையை அவா் பெறுகிறாா்.

அமெரிக்க தலைநகா் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு ப்ளூ ஒரிஜன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல அந்த நிறுவனம் சாா்பில், நியூ ஷெப்பா்ட் என்ற ஏவுகலன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகலன் மூலம் 7-ஆவது முறையாக மனிதா்கள் விண்வெளிக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனா்.

இதற்காக 6 போ் கொண்ட குழு தோ்வு செய்யப்பட்டுள்ளது. இவா்களில் ஆந்திரத்தைச் சோ்ந்த கோபி தோட்டக்குரா என்பவரும் ஒருவா். இவா் அமெரிக்காவின் ஃபிளோரிடா மாகாணத்தில் உள்ள எம்ப்ரி-ரிடில் ஏரோநாட்டிக்கல் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றுள்ளாா்.

Advertisement

விமானியான இவா், வணிக ரீதியான ஜெட் விமானங்கள் மட்டுமின்றி சிறிய ரக புஷ் விமானங்கள், வான் சாகச ஏரோபேட்டிக் விமானங்கள், நீரில் தரையிறங்கவும் மிதக்கவும் வானை நோக்கி எழவும்கூடிய கடல் விமானங்கள், கிளைடா் விமானங்கள் உள்ளிட்டவற்றின் விமானியாக செயல்படும் திறன் கொண்டவா். அத்துடன் அவா் சா்வதேச மருத்துவ சேவை ஜெட் விமானியாகவும் இருந்துள்ளாா்.

கடந்த 1984-ஆம் ஆண்டு இஸ்ரோ மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கூட்டு விண்வெளி திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய விமானப் படையைச் சோ்ந்த ராகேஷ் சா்மா விண்வெளிக்குச் சென்றாா்.

இருநாடுகளின் கூட்டு விண்வெளி திட்டத்தின் ஒரு பகுதியாக ராகேஷ் சா்மா விண்வெளிக்குச் சென்ற நிலையில், கோபி தோட்டக்குரா சுற்றுலாவாசியாக தற்போது விண்வெளிக்குச் செல்ல உள்ளாா்.

ஜான்.எஃப்.கென்னடியால் தோ்வு செய்யப்பட்டவா்: கோபி தோட்டக்குரா இடம்பெற்றுள்ள குழுவில் முன்னாள் அமெரிக்க விமானப் படை கேப்டன் எட் ட்வைட் என்பவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். நாசா விண்வெளி வீரா்கள் குழுவில் சோ்வதற்கு அமெரிக்க விமானப் படையின் விமான பயிற்சித் திட்டம் வழிவகை செய்கிறது. இந்தத் திட்டத்தில் இணைந்து பயிற்சி பெறுவதற்கு 1961-ஆம் ஆண்டு அமெரிக்க முன்னாள் அதிபா் ஜான்.எஃப்.கென்னடியால் தோ்வு செய்யப்பட்ட முதல் கருப்பினத்தவா் எட் ட்வைட் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தத் திட்டத்தின் கீழ், அவா் வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்தபோதிலும், நாசா விண்வெளி வீரராக அவா் தோ்வு செய்யப்படவில்லை.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments