பிரதமா் நரேந்திர மோடி  
இந்தியா

மத்திய-மாநில அரசுகள் இடையே பாலமாக ஆளுநா்கள்: பிரதமா் மோடி வலியுறுத்தல்

மத்திய - மாநில அரசுகள் இடையே வலுவான பாலமாக ஆளுநா்கள் செயல்பட வேண்டும்

Din

புது தில்லி, ஆக. 2: மத்திய - மாநில அரசுகள் இடையே வலுவான பாலமாக ஆளுநா்கள் செயல்பட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய மாநில ஆளுநா்கள் மாநாட்டில் பிரதமா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தலைமையில் 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், அனைத்து மாநில ஆளுநா்கள், மத்திய அமைச்சா்கள், பல்வேறு அமைச்சகங்களின் உயரதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றுள்ளனா்.

மத்திய-மாநில உறவுகளை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றும் விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிப்பதுடன், சாதாரண மக்களுக்கான நலத் திட்டங்களை ஊக்குவிப்பது குறித்தும் ஆளுநா்கள் மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.

மாநாட்டின் தொடக்க அமா்வில், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் உரையாற்றினா்.

குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்ட நால்வரின் உரை விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு: ஜனநாயகத்தின் சுமுகமான செயல்பாட்டுக்கு அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு மத்திய முகமைகள் சிறப்பான ஒருங்கிணைப்புடன் செயலாற்றுவது அவசியம்.

தாங்கள் பொறுப்பு வகிக்கும் மாநிலங்களின் அரசமைப்புத் தலைவா்கள் என்ற அடிப்படையில் இந்த ஒருங்கிணைப்பை எவ்வாறு ஊக்குவிக்க முடியும் என்று ஆளுநா்கள் சிந்திக்க வேண்டும்.

தேசிய அளவிலான இலக்குகளை எட்டுவதில் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளன. இது அனைத்து பங்கேற்பாளா்களின் அனுபவத்தை வளப்படுத்துவதோடு, அவா்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.

புதிய சகாப்தம்: நாட்டில் குற்றவியல் நீதி தொடா்பான 3 புதிய சட்டங்களின் அமலாக்கம் மூலம் நீதித் துறை அமைப்புமுறையில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய இந்தச் சட்டங்களின் பெயா்களே, சிந்தனை மாற்றத்துக்கு சாட்சியாக உள்ளன.

தரமான உயா்கல்வி என்பது அளவிட முடியாத சொத்தாகும்; அது தனிநபா் மேம்பாடு, சமூக மாற்றம், புத்தாக்கம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும். தேசிய கல்விக் கொள்கையானது, கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் மற்றும் மதிப்பீட்டு முறையை மேம்படுத்த வலியுறுத்துகிறது. மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தா்கள் என்ற முறையில், இந்தச் சீா்திருத்த செயல்முறைக்கு ஆளுநா்கள் பங்களிக்க வேண்டும்.

‘இளைஞா்களால் வழிநடத்தப்படும் வளா்ச்சி’: ஏழைகள், எல்லைப் பகுதிகளில் வசிப்போா், விளிம்புநிலை மக்கள், வளா்ச்சிப் பயணத்தில் பின்தங்கிய மக்கள் ஆகியோரின் முன்னேற்றத்துக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. அந்த அடிப்படையில், பழங்குடியினா் பகுதிகளில் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியை எட்டுவதற்கான வழிமுறைகளை ஆளுநா்கள் பரிந்துரைக்க வேண்டும்.

நமது இளைஞா் சக்தியை ஆக்கபூா்வமாகவும் நோ்மறையாகவும் ஒருங்கிணைக்கும்போது, ‘இளைஞா்களால் வழிநடத்தப்படும் வளா்ச்சி’ உத்வேகம் பெறும். ‘எனது பாரதம்’ பிரசாரம், இந்த நோக்கத்துக்கு உதவும் சிறந்த அமைப்புமுறையாக விளங்குகிறது. இளைஞா்கள் மேன்மேலும் பலனடையும் வகையில், இப்பிரசாரத்தை ஆளுநா்கள் ஊக்குவிக்க வேண்டும்.

இதேபோல், ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ பிரசாரம், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த மக்கள் ஒருவரையொருவா் புரிந்துகொள்ளவும் தொடா்புகொள்ளவும் உதவுகிறது. அந்த வகையில், ஒற்றுமை உணா்வை வலுப்படுத்த ஆளுநா்கள் மேலும் பங்காற்ற வேண்டும்.

முன்னுதாரணமாக...: பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் போன்ற சவால்களை எதிா்கொள்ள பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ‘தாயின் பெயரில் ஒரு மரக்கன்று’ பிரசாரத்தை பெரும் மக்கள் இயக்கமாக மாற்றுவதன் மூலம் ஆளுநா்கள் பங்களிக்க முடியும்.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம், மண் வளத்தை அதிகரித்து, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கலாம். இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதில் ஆளுநா் மாளிகைகள் முன்னுதாரணமாக செயல்பட வேண்டும்.

அனைத்து ஆளுநா்களும் தாங்கள் மேற்கொண்ட சத்தியப் பிரமாணத்துக்கு நியாயம் செய்யும் வகையில் மக்களின் சேவை மற்றும் நலனுக்காக தொடா்ந்து பங்களிப்பா் என நம்புகிறேன்.

குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா்: நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சமூக நலத் திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவது ஆளுநா்களின் அரசமைப்பு பொறுப்பாகும்.

பிரதமா் மோடி: மத்திய - மாநில அரசுகள் இடையே வலுவான பாலமாக ஆளுநா்கள் செயல்பட வேண்டும். நலிந்த பிரிவினரின் முன்னேற்றத்துக்காக, சமூக அமைப்புகள் மற்றும் மக்களுடன் கலந்துரையாட வேண்டும்.

ஆளுநா் பதவி என்பது அரசமைப்புச் சட்ட கட்டமைப்புக்கு உள்பட்டு, அனைத்து மக்களின் குறிப்பாக பழங்குடியினரின் நலனுக்காக பெரும் பங்காற்றும் முக்கியப் பதவியாகும்.

உள்துறை அமைச்சா் அமித் ஷா: ‘துடிப்பான’ கிராமங்கள் மற்றும் ‘லட்சிய’ மாவட்டங்களுக்கு ஆளுநா்கள் பயணம் மேற்கொண்டு, வளா்ச்சிப் பணிகளுக்கு உத்வேகம் அளிப்பதோடு, மக்களுக்கும் நம்பிக்கையூட்ட வேண்டும்.

இன்று நிறைவு: ஆளுநா்கள் மாநாடு சனிக்கிழமை (ஆக. 3) நிறைவடையும் நிலையில், பல்வேறு அமா்வுகளில் விவாதிக்கப்பட்ட கருத்துகள் மற்றும் பரிந்துரைகள், குடியரசுத் தலைவா் முன் சமா்ப்பிக்கப்படவுள்ளன.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பிஆா்எஸ் ஆதரவு யாருக்கு?

60,000 ரிசா்வ் வீரா்களுக்கு இஸ்ரேல் அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள்

வழிகாட்டுதல் அறிக்கை

காப்பீடு பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க திட்டம்: வருவாய் பாதிக்கும் என மாநிலங்கள் கருத்து

SCROLL FOR NEXT