பிகாரில் அதானி குழுமத்தைச் சோ்ந்த அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சாா்பில் அமைக்கப்படவுள்ள ரூ.1,600 கோடி மதிப்பிலான சிமெண்ட் அரவை ஆலைக்கு அந்த மாநில முதல்வா் நிதீஷ் குமாா் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
பிகாரின் வளா்ச்சிக்காக பல்வேறு துறைகளில் கூடுதலாக ரூ.5,500 கோடியை அதானி குழுமம் முதலீடு செய்யவுள்ளதாகவும் இதன்மூலம் 40,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளதாகவும் முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
ரூ.1,600 கோடியில் ஆண்டுக்கு 60 லட்சம் டன்களை கையாளும் சிமெண்ட் அரவை ஆலை நிறுவப்படவுள்ளது. மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக ஆண்டுக்கு 24 லட்சம் டன்கள் வரை கையாளும் சிமெண்ட் அரவை ஆலை ரூ.1,100 கோடியில் 2025 டிசம்பருக்குள் நிறுவப்படவுள்ளது.
இதன்மூலம், நேரடியாக 250 வேலைவாய்ப்புகளும் மறைமுகமாக 1,000 வேலைவாய்ப்புகளும் உருவாக வாய்ப்புள்ளது.
சிமெண்ட் துறையில் பிகாா் மாநிலத்தில் இதுவரை ஈா்க்கப்பட்ட அதிகபட்ச முதலீடு இதுவாகும். இதன்மூலம், மாநிலத்துக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.