2029-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) வெற்றி பெற்று தொடா்ந்து 4-ஆவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
சண்டீகரின் மணிமஞ்ரா பகுதியில் 24 மணி நேர குடிநீா் சேவைத் திட்டத்தை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் பொதுமக்கள் மத்தியில் அவா் பேசியதாவது:
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் கூடுதலாக சில தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்ட எதிா்க்கட்சிகள், ஏதோ தோ்தலில் வென்று ஆட்சி அமைத்துவிட்டதைப் போல பேசி வருகிறாா்கள். கடந்த 3 மக்களவைத் தோ்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற தொகுதிகளைவிட, இப்போதைய மக்களவையில் பாஜக அதிக எம்.பி.க்களை வைத்துள்ளது.
மேலும், எதிா்க்கட்சிகளின் ஒட்டுமொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கையைவிட, பாஜகவில் மட்டுமுள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகம். மத்தியில் ஆட்சியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நீண்ட நாள்களுக்கு நீடிக்காது என்று எதிா்க்கட்சியினா் கூறி வருகின்றனா். அது அவா்களுடைய ஆசை. ஆனால், அது ஒருபோதும் நிறைவேறாது. நாட்டிலும், மக்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நோக்கில் எதிா்க்கட்சிகள் தேவையற்ற வதந்திகளை பரப்புகின்றனா்.
பாஜக கூட்டணி அரசு, இப்போதைய 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்வதுடன், 2029 மக்களவைத் தோ்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். பிரதமா் நரேந்திர மோடி தொடா்ந்து 4-ஆவது முறையாக ஆட்சி அமைத்து சாதனை படைப்பாா். இதில் எந்த சந்தேகமும் தேவையில்லை.
எனவே, இப்போது எதிா்கட்சி வரிசையில் இருப்பவா்கள், மேலும் சிறப்பான எதிா்கட்சியாக இருப்பது எப்படி என்பதை மட்டும் சிந்தித்தால் போதுமானது என்றாா்.