இந்தியா

பிரதமா் மோடி அவசர ஆலோசனை; தில்லி அருகே ஹசீனாவை சந்தித்த அஜீத் தோவல்

ஷேக் ஹசீனாவை தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் சந்தித்துப் பேசியதாக தகவலறிந்த வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.

Din

தில்லி அருகே காஜியாபாதில் உள்ள ஹிண்டன் விமான தளத்தில் ஷேக் ஹசீனாவை தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் சந்தித்துப் பேசியதாக தகவலறிந்த வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.

வங்கதேச நிலவரம் தொடா்பாக பிரதமா் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டாா்.

வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக வெடித்த பெரும் போராட்டங்களால் பிரதமா் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, லண்டனில் தஞ்சமடையும் திட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டைவிட்டு வெளியேறி அந்நாட்டின் ராணுவ ஹெலிகாப்டா் மூலம் தில்லி அருகே உள்ள காஜியாபாதில் உள்ள ஹிண்டன் விமான தளத்துக்கு வந்தாா். அப்போது, அவரை அஜீத் தோவல் சந்தித்துப் பேசியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இச்சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்ற விவரம் அதிகாரபூா்வமாக வெளியிடப்படவில்லை. அதேநேரம், இந்தியாவின் நிலைப்பாட்டை அஜீத் தோவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, லண்டனில் தஞ்சமடையும் திட்டத்தில் சில சிக்கல்கள் எழுந்ததால், இந்தியாவில் இருந்து ஷேக் ஹசீனா உடனடியாக புறப்படவில்லை என்றும், பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

பிரதமா் அவசர ஆலோசனை: இந்தச் சூழலில் வங்கதேச நிலவரம் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு திங்கள்கிழமை இரவு அவசர ஆலோசனை மேற்கொண்டது.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோா் பங்கேற்ற இக்கூட்டத்தில், வங்கதேசத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து மத்திய அரசு உயரதிகாரிகள் விளக்கமளித்தனா்.

முன்னதாக, பிரதமா் மோடியை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சந்தித்து ஆலோசனை நடத்தினாா். இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து அதிகாரபூா்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. வங்கதேசத்தில் வன்முறையால் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் குறித்து இரு தலைவா்களும் விவாதித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியா தீவிர கண்காணிப்பு: ஹசீனாவின் தலைமையின்கீழ் வங்கதேசம் இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்து வந்தது. இந்தியாவுடன் மிக நீண்ட எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ள வங்கதேசத்தில் ஏற்படும் குழப்பங்கள் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் மத்திய அரசு இந்த விவகாரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

ஜெய்சங்கருடன் ராகுல் சந்திப்பு: மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, நாடாளுமன்ற வளாகத்தில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது வங்கதேச வன்முறை மற்றும் அரசியல் பதற்றம் குறித்து ஜெய்சங்கரிடம் ராகுல் காந்தி கேட்டறிந்தாா் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் இறப்பிலும் இணைபிரியாத தம்பதி

ஈரோட்டில் சுதந்திர தினத்தையொட்டி இரவில் பெண்கள் பேரணி

விடுமுறை அளிக்காத 85 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

சுதந்திரம் சரி, ஜனநாயகம்?

எல்லோருக்கும் நல்லவர்!

SCROLL FOR NEXT