காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நடிகையும், மக்களவை எம்பியுமான கங்கனா ரணாவத்திடம் ரூ. 40 கோடி கேட்டு மானநஷ்ட வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சில நாள்களுக்கு முன்பு மக்களவையில் சாதிவாரி கணக்கெடுப்புப் பற்றி பேசிய போது ராகுல் காந்தியின் சாதி குறித்து அனுராக் தாக்கூர் கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலையில் குல்லா, கழுத்தில் சிலுவை மற்றும் நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்தபடி ராகுல் காந்தி இருப்பதுபோன்ற எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து, அதற்கு கீழே ’யாருடைய சாதியையும் கேட்காமல் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த விரும்புபவர்’ என்று எழுதியிருந்தார்.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கங்கனா விமர்சிக்கப்பட்டதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் நரேந்திர மிஷ்ரா இந்த விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடிவெடுத்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பச் சட்டப்படி ஒருவருடைய புகைப்படத்தை மார்பிங் செய்து அவருடைய அனுமதி இல்லாமல் இணையத்தில் பரப்புவது சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டுள்ள மிஷ்ரா, ராகுல் காந்தி மீது களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி கங்கனா மீது ரூ.40 கோடி கேட்டு மானநஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கடந்த வாரம் ராகுல் காந்தி மது அருந்திவிட்டு பேசுவதாகவும் அவருக்கு போதை மருந்து சோதனை நடத்தவேண்டும் என்று பேசிய கங்கனா கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.