நிலச்சரிவால் உருகுலைந்த முண்டக்கை முகவரிகளுக்கு வந்த கடிதங்களை எடுத்துக் கொண்டு, உரியவர்களிடம் ஒப்படைக்க அஞ்சல்காரர் அலைமோதி வருகிறார்.
ஒரு நாள் முழுவதும் இரண்டு முகவரிகளுக்கு வந்த கடிதத்தில் உள்ள நபர்களை தேடியதாகவும், இறுதியில் ஒருவரை கண்டுபிடுத்துவிட்டதாகவும் அஞ்சல்காரர் பி.டி. வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
நிலச்சரிவில் முண்டக்கை தபால் நிலையம் மண்ணுக்குள் புதைந்த நிலையில், தற்காலிக தபால் நிலையம் சூரல்மலையில் புதன்கிழமை அமைக்கப்பட்டது.
முண்டக்கை அஞ்சல்காரர் வேலாயுதம், ‘சந்தோஷ், மடத்தில் வீடு, முண்டக்கை, வெள்ளரிமலை’, ‘அப்துல் ரஹிமான், சேரிபரம்பை. முண்டக்கை, வெள்ளரிமலை’ என்ற இரு முகவரிக்கு வந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு உரியவர்களிடம் ஒப்படைக்க புறப்பட்டுள்ளார்.
முண்டக்கையில் வீடு இழந்த பெரும்பாலானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அனைத்து முகாம்களுக்கு காலை முதல் இருவரையும் தேடி அலைந்துள்ளார்.
இறுதியில், நிலச்சரிவில் காணாமல் போன அப்துல் ரஹிமானை கண்டறிய முடியாத நிலையில், நிலச்சரிவில் காயமடைந்த சந்தோஷ், வயநாடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக முதலில் அவருக்கு தகவல் கிடைத்தது.
ஆனால், அரபேட்டையில் உள்ள உறவினரின் இல்லத்தில் சந்தோஷ் இருப்பதை அறிந்த தபால்காரர், நாளை அவரிடம் கடிதத்தை அளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த 33 ஆண்டுகளாக முண்டக்கை அஞ்சல்காரராக பணிபுரிந்து வருகிறார் வேலாயுதம். தற்காலிக தபால் நிலையம் தொடங்கியவுடன், கடிதங்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவில் தொலைபேசிகளை பலர் இழந்துள்ளதால், அவர்களின் உறவினர்கள் கடிதம் மூலம் தொடர்பு கொள்ள முயன்று வருகின்றனர். இதனால், முண்டக்கை தபால் நிலையத்தில் கடிதங்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதனிடையே நிலச்சரிவில் உயிர் தப்பிய தபால்காரர் வேலாயுதம், தனது வீட்டை இழந்த நிலையில், உறவினர் வீட்டில் இருந்து பணிக்கு திரும்பியுள்ளார்.
நிலச்சரிவில் யார் தப்பினார்கள்? யார் உயிருடன் இருக்கிறார்கள்? எங்கே இருக்கிறார்கள்? என்ற பல்வேறு சூழலுக்கு இடையே கடிதங்களுடன் வேலாயுதத்தின் பயணம் தொடர்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.