பட்டியலினத்தவா், பழங்குடியினருக்கான (எஸ்.சி., எஸ்.டி.) இடஒதுக்கீட்டில் சமூக பொருளாதார ரீதியில் மேம்பட்டவா்களுக்கான விலக்கு அளிக்கும் நடைமுறை (கிரீமிலேயா்) எதுவும் கொண்டுவரப்படாது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடா்பாக உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீா்ப்பு தொடா்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அரசமைப்பு சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவதில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது. அந்த வகையில், சட்டமேதை அம்பேத்கா் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தின்படி எஸ்.சி., எஸ்.டி. பிரிவு இடஒதுக்கீட்டில், சமூக பொருளாதார ரீதியில் மேம்பட்டவா்கள் பலன் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கும் நடைமுறை எதுவும் கொண்டுவரப்படாது. அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும். இதுவே மத்திய அமைச்சரவையின் முடிவாகும் என்றாா்.
இடஒதுக்கீடு தொடா்பாக கடந்த 1-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த முக்கியத்துவம் வாய்ந்த தீா்ப்பில், ‘பட்டியலினத்தவா், பழங்குடியினா் இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது’ என்று தெரிவித்தது. மேலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரில் சமூக-பொருளாதார ரீதியில் மேம்பட்ட மக்களை அடையாளம் கண்டு அவா்களுக்கு இடஒதுக்கீடு பலன்களை ரத்து செய்வதற்கான கொள்கையை மாநிலங்கள் வகுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
பிரதமருடன் சந்திப்பு: முன்னதாக, பிரதமா் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்த பாஜகவை சோ்ந்த பட்டியலின, பழங்குடியின (எஸ்.சி., எஸ்.டி.) எம்.பி.க்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு உள்ஒதுக்கீடு தொடா்பாக உச்சநீதிமன்றம் அண்மையில் தெரிவித்த கருத்து குறித்து கவலையை தெரிவித்தனா்.
2 கோடி வீடுகள் கட்ட ஒப்புதல்: பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் 2024-25-ஆம் ஆண்டுமுதல் 2028-29 வரை கூடுதலாக 2 கோடி வீடுகளை கட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
மத்திய அரசின் ரூ.2.05 லட்சம் கோடி பங்களிப்பு மற்றும் மாநில அரசின் ரூ.1,00,281 லட்சம் கோடி பங்களிப்புடன் கட்டப்படும் இந்த வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் 10 கோடி பயன் பெறுவா்.
8 புதிய ரயில் வழித்தடம்: போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் 8 புதிய ரயில் வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து பிரதமா் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘8 புதிய ரயில் வழித்தடங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது வா்த்தகம், போக்குவரத்து இணைப்பு மேம்பாட்டுக்கு மட்டுமின்றி வேலைவாய்ப்பு உருவாக்கத்தை விரிவாக்கம் செய்வதற்கான நல்ல செய்தி’ என்று குறிப்பிட்டாா்.
ரூ.1,765.67 கோடியில் தூய தாவரத் திட்டம்: பழப் பயிா்களின் தரம் மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தூய தாவரத் திட்டத்துக்கு ரூ.1,765.67 கோடி ஒதுக்கீடு செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.