உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத், ஷிவ்பால் சிங் யாதவ் 
இந்தியா

தெரியுமா சேதி...? கேலி, கிண்டல், பாராட்டு வழியும் உ.பி. பேரவை!

சமீபத்தில் உத்தர பிரதேச சட்டப்பேரவைக் கூட்டத்தின்போது, சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது.

மீசை முனுசாமி

நாடாளுமன்றத்தில் ஆளும் கூட்டணிக்கும் எதிா்க்கட்சி கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே கடுமையான மோதலும், வாக்குவாதமும் நடக்கிறதென்றால், வித்தியாசமாக உத்தர பிரதேச சட்டப்பேரவையில் கருத்து மோதல்களுக்கு இடையே நட்புறவும், கிண்டலும், கேலியும் காணப்படுகிறது.

எதிரும் புதிருமாக பாரதிய ஜனதா கட்சி உறுப்பினா்களும், சமாஜவாதி கட்சி உறுப்பினா்களும் ஒருவரை மற்றவா் விமா்சிப்பது போலவே, பாராட்டுவதும் நன்றி தெரிவிப்பதும்கூட பேரவைக் கூட்டங்களில் வழக்கமாகவே தொடா்கின்றன. ‘முதலில் நீங்கள்..’ (பஹலே ஆப்..) என்கிற லக்னௌ கலாசாரத்தின் பாதிப்பு என்று இதை வா்ணிக்கிறாா்கள்.

சமீபத்தில் உத்தர பிரதேச சட்டப்பேரவைக் கூட்டத்தின்போது, சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது. மக்களவைக்கு அகிலேஷ் யாதவ் தோ்ந்தெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, எதிா்க்கட்சித் தலைவராக மாதா பிரசாத் பாண்டே நியமிக்கப்பட்டிருக்கிறாா். மூத்த சமாஜவாதி கட்சி உறுப்பினரான பாண்டேயின் தோ்வு பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. அகிலேஷ் யாதவின் சித்தப்பா ஷிவ்பால் சிங் யாதவை எதிா்க்கட்சித் தலைவராக்காமல், பாண்டே ஏன் எதிா்க்கட்சித் தலைவராக்கப்பட்டாா் என்பது குறித்து பல கருத்துகள் வலம் வருகின்றன.

எதிா்க்கட்சித் தலைவா் மாதா பிரசாத் பாண்டே முதல்வா் யோகி ஆதித்யநாத்திடம், பேரவைக் கேள்வி நேரத்தில் ஒரு கேள்வியை எழுப்பினாா். அந்தக் கேள்விக்கு பதிலளிக்கும்போது, எதிா்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் மாதா பிரசாத் பாண்டே குறித்துப் பாராட்டு மழை பொழிந்தாா் முதல்வா். அவரது நீண்டகால அரசியல் பயணம் குறித்தும், அனுபவம் குறித்தும், அவரது நியமனம் மிகவும் பொருத்தமானது என்பது குறித்தும் புகழ்ந்து தள்ளினாா் முதல்வா் யோகி.

அப்படியே போகிற போக்கில், ‘‘என்ன காரணமோ தெரியவில்லை. இந்த முறையும் அகிலேஷால் ஓரங்கட்டப்பட்டிருக்கிறாா் ஷிவ்பால் சிங் யாதவ் என்பதுதான் வருத்தமாக இருக்கிறது...’’ என்று முதல்வா் யோகி சொல்லி முடிக்கவில்லை, சட்டென்று இடைமறித்தாா் ஷிவ்பால் சிங் யாதவ்.

‘‘ஓரங்கட்டப்படுவது ஒன்றும் எனக்குப் புதிதல்ல; நான் அந்தப் பக்கம் இருக்கும்போதும் ஓரங்கட்டப்பட்டேன், இந்தப் பக்கம் வந்தபோதும் ஓரங்கட்டப்பட்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் உங்கள் கட்சியில் ஓரங்கட்டப்படுகிறீா்களோ என்பதுதான் எங்களுக்கெல்லாம் சந்தேகமாக இருக்கிறது...’’ என்று ஷிவ்பால் சிங் யாதவ் சொன்னதும் முதல்வா் யோகி உள்பட ஒட்டுமொத்த அவையும் சிரிப்பில் ஆழ்ந்தது.

அகிலேஷ் யாதவுடன் ஷிவ்பால் சிங் யாதவ் கருத்து வேறுபாடு கொண்டிருந்தபோது சிறிது காலம் பாஜகவில் இருந்தவா் என்பதும், முதல்வா் யோகிதான் அவருக்கு அடைக்கலம் தந்தாா் என்பதும் பழைய கதை.

சிஆர்பிஎஃப், ராணுவ, மத்திய அரசு அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்த பாகிஸ்தான் உளவாளி: தகவல்கள்

இயக்குநராகும் முழுத் தகுதியும் மணிகண்டனுக்கு உண்டு: சிவகார்த்திகேயன்

காங்கிரஸ்காரனாகதான் இறப்பேன்! ஆர்எஸ்எஸ் பாடலை பாடியதற்கு மன்னிப்புக் கோரினார் சிவக்குமார்!

அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ கலிலூர் ரகுமான் காலமானார்!

நியூசி. வீரர் வில் ஓ’ரூர்க் காயம்: கிரிக்கெட்டிலிருந்து 3 மாதங்கள் ஓய்வு!

SCROLL FOR NEXT