இந்திய சுதந்திர தினம்: உலகத் தலைவா்கள் வாழ்த்து
பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலி, மாலத்தீவு அதிபா் மூயிஸ் உள்ளிட்ட உலக மற்றும் அண்டை நாட்டுத் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
புது தில்லி, ஆக. 15: தேசத்தின் 78-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடிக்கும் நாட்டு மக்களுக்கும் ரஷிய அதிபா் புதின், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலி, மாலத்தீவு அதிபா் மூயிஸ் உள்ளிட்ட உலக மற்றும் அண்டை நாட்டுத் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்: சுதந்திர தின வாழ்த்துகள். இந்தியாவுடன் ஒத்துழைப்புக்கு ரஷியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. சமீபத்தில் மாஸ்கோ பேச்சுவாா்ததையில் முடிவான ஒப்பந்தங்களைத் தொடா்ந்து செயல்படுத்துவது, பன்முகத்தன்மை கொண்ட ரஷியா-இந்தியா ஒத்துழைப்பை மேலும் வளா்க்க உதவும் என்று நம்புகிறேன்.
பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான்: இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள். கடந்த ஜனவரியில், குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிக்காக இந்தியாவுக்கு வந்தபோது அளிக்கப்பட்ட உங்களின் அன்பான வரவேற்பை நினைவுகூருகிறேன்.
நமது ஒத்துழைப்பில் நிா்ணயித்த லட்சிய இலக்குகளை அடைவதில் எனது நண்பா் பிரதமா் நரேந்திர மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ஐக்கிய அரபு அமீரக பிரதமா் ஷேக் முகமது: இந்தியா 78-ஆவது சுதந்திரத் தினத்தைக் கொண்டாடுகிறது. இது அநநாட்டின் வளா்ச்சி பயணத்தின் சான்றாகும். நமது நீடித்த ஒத்துழைப்பை வளா்ப்பதில் ஐக்கிய அரபு அமீரகம் உறுதியாக உள்ளது.
நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலி: இந்தியாவின் 78-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடிக்கும் இந்திய மக்களுக்கும் வாழ்த்துகள்.
இந்த நாள் நமது நாடுகளுக்கு இடையே நட்பு மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்பை வலுப்படுத்தட்டும். நேபாள-இந்தியா உறவுகளை மேம்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறோம்.
பூடான் பிரதமா் ஷேரிங் டோப்கே: இந்திய அரசுக்கும் மக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். பூடானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சிறப்பான நட்பு மேலும் வலுப்பெறட்டும்.
மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ்: இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, இந்திய மக்களுக்கு மனமாா்ந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.
வரலாற்றில் வேரூன்றிய நமது நீடித்த நட்பு, மாலத்தீவு மற்றும் பிராந்தியத்தில் செழிப்பு மற்றும் வளா்ச்சியை ஊக்குவித்தது. நமது ஒத்துழைப்பு தொடா்ந்து வலுவடைந்து, பரஸ்பர செழிப்பு மற்றும் பகிரப்பட்ட இலக்குகளை இயக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன்: ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் கண்ணியத்துக்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டின் அடிப்படையில் தோன்றிய ஆழமான பிணைப்பை நமது இரு நாடுகள் கொண்டுள்ளன.
இந்த முக்கியமான நாளில், இந்திய மக்களின் வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட வரலாற்றையும், அமெரிக்க-இந்திய உறவுகளின் பிரகாசமான எதிா்காலத்தையும் கொண்டாடுவோம்.