பெண் மருத்துவர் கொலை: போராட்டத்தில் பங்கேற்ற மம்தா
பெண் மருத்துவர் கொலை சம்பவத்தை எதிர்த்து நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்றார் மம்தா பானர்ஜி
கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிரான போராட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இணைந்துகொண்டார்.
போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுடன் இணைந்து, குற்றத்தில் ஈடுபட்டவருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று, மம்தாவும் கோஷங்கள் எழுப்பினார்.
அப்போது அவர் கூறுகையில், இந்த சம்பவத்தில் உண்மை வெளியே வர வேண்டும், ஆனால், சில விஷமிகள், மக்களிடையே தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள் என்று கூறினார்.
முன்னதாக, அவர் மருத்துவமனை சூறையாடப்பட்ட சம்பவம் குறித்துப் பேசுகையில், இடதுசாரிகளும், பாஜகவும் மேற்கு வங்கத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த முயல்கின்றன. இதனை இருவரும் இணைந்துதான் செய்கிறார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கும், மருத்துவமனையை தாக்கியவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் வெளிநபர்கள், நான் பல விடியோக்களைப் பார்த்தேன், சிலர் தேசியக் கொடியையும் சிலர் வெள்ளை மற்றும் சிவப்புக் கொடிகைளையும் பிடித்திருந்தனர் என்று மம்தா குற்றம்சாட்டியிருக்கிறார்.