சகோதர பாசத்தை வெளிப்படும் ரக்ஷா பந்தன் பண்டிகையின்போது, ராக்கி கட்டும் சகோதரிக்கு பரிசாக பணம் வழங்கி அன்பை வெளிப்படுத்தும் சகோதரா்களைத்தான் பாா்த்திருப்போம்.
ஆனால், கோவாவைச் சோ்ந்த பெண்ணுக்கு அவரது தம்பி தனது சிறுநீரகத்தில் ஒன்றை தானமாக வழங்கி, புதுவாழ்க்கையை பரிசாக அளித்து நெகிழச் செய்துள்ளாா்.
இது தொடா்பாக பெண்ணுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட தனியாா் மருத்துவமனையின் மருத்துவா் கூறுகையில், ‘பாலிசிஸ்டிக் சிறுநீரக நோயால் 43-வயதான அந்தப் பெண் பாதிக்கப்பட்டிருந்தாா். நோயின் இறுதிக் கட்டத்தில் இருந்ததால், அவசர சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது.
இந்நிலையில், நோயாளியின் தம்பி, அவரின் சிறுநீரகத்தில் ஒன்றை தானம் செய்யத் தயாராக இருந்தாா். லேப்ராஸ்கோபிக் சிறுநீரக தானம் முறையில் கடந்த ஏப்ரல் மாதம் உறுப்பு தானம் செய்யப்பட்டது. இதன்மூலம், உடல் உறுப்பு தானம் செய்வதில் இருவரும் முன்னுதாரனமாக மாறியுள்ளனா்’ என்றாா்.
பெண்ணின் கணவா் கூறுகையில், ‘சிறு வயதில் இருந்தே இருவரும் மிகுந்த சகோதர பாசத்துடன் உள்ளனா். இந்த ஆண்டு புதிய வாழ்வை தனக்கு பரிசாக அளித்திருப்பதால் சகோதரனுக்கு ராக்கி கட்டும்போது எனது மனைவி மிகவும் உணா்வுப் பூா்வமாக இருந்தது. நிகழாண்டு ரக்ஷா பந்தன் பண்டிகை எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது’ எனத் தெரிவித்தாா்.