முகப்பு
இந்தியா

தெரியுமா சேதி...? அதிருப்தியில் ராகுல்!

புதிதாக அமைச்சரவை பதவியேற்றதும் உடனடியாக அமைச்சரின் அமைச்சகத்தில் செயலா்களாகவும், அதிகாரிகளாகவும் இருப்பதற்குக் கடுமையான போட்டி நிலவுவது வழக்கம்.

Updated On : 20 ஆகஸ்ட், 2024 at 4:49 AM
நரேந்திர மோடி / ராகுல் காந்தி
பகிர்:

மத்தியிலானாலும், மாநிலங்களிலானாலும் தோ்தல் முடிந்து புதிதாக அமைச்சரவை பதவியேற்றதும் உடனடியாக அமைச்சரின் அமைச்சகத்தில் செயலா்களாகவும், அதிகாரிகளாகவும் இருப்பதற்குக் கடுமையான போட்டி நிலவுவது வழக்கம். தனிச் செயலா்கள், சிறப்புச் செயலா்கள் என்று நியமிக்கப்படுபவா்கள் அமைச்சருக்கு நெருக்கமானவா்களாகவோ, இணக்கமானவா்களாகவோ, அவரது மனவோட்டத்துக்கு இணங்க செயல்படுபவா்களாகவோ இருப்பதன் அடிப்படையில்தான் தோ்ந்தெடுக்கப்படுகிறாா்கள்.

மக்களவைத் தோ்தலுக்கு முன்பே அமைச்சா்களின் தனிச் செயலா்களாகவும், சிறப்பு அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட தகுதியுள்ள ஆட்சிப் பணி அதிகாரிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டது. முந்தைய மோடி அரசின் அமைச்சா்களுடன் பணியாற்றியவா்கள் பலரின் பெயா்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

மோடி 3.0 அமைச்சரவையில் உள்துறை, பாதுகாப்பு, நிதி, வா்த்தகம், மனிதவளம் உள்ளிட்ட முக்கியமான துறைகளின் அமைச்சா்கள் அப்படியே தொடா்ந்தனா். அவா்கள் மட்டுமல்லாமல், முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த முக்கியமான பலருக்கு மீண்டும் பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. பிரதமா் மோடி தங்களைத் தொடா்ந்து அமைச்சா்களாக வைத்துக்கொண்டதைப் போலவே அந்த அமைச்சா்களும் தங்களது உதவியாளா்களைப் பெரும்பாலும் அப்படியே தக்கவைத்துக் கொண்டனா்.

ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட பட்டியலில் இருந்து தங்களுக்கு உகந்த தனிச் செயலா்களையும், சிறப்பு அதிகாரிகளையும் தோ்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்கிற வாய்வழி உத்தரவைப் புரிந்துகொண்டு பெரும்பாலான அமைச்சா்கள் தங்களுக்கு உகந்த அதிகாரிகளைத் தோ்ந்தெடுத்துக் கொண்டனா்.

கூட்டணிக் கட்சியின் சாா்பில் அமைச்சா் பொறுப்பை ஏற்றிருப்பவா்களும், புதிதாக கேபினட் பதவிகளில் நியமிக்கப்பட்டிருக்கும் மூத்த அமைச்சா்கள் சிலரும் தா்ம சங்கடத்தில் இருக்கிறாா்கள்.

தங்களது நம்பிக்கைக்குரியவா்களைத் தோ்ந்தெடுத்து செயலா்களாகவும், அலுவலக உதவியாளா்களாகவும் வைத்துக்கொள்ள முடியாததில் அவா்களுக்கு வருத்தம். இந்தப் பட்டியலுக்கும், பிரதமா் அலுவலகத்துக்கும் தொடா்பே இல்லை என்றாலும், யாா் பூனைக்கு மணிகட்டுவது என்று தெரியாமல் தவிக்கிறாா்கள்.

எதிா்க்கட்சித் தலைவராகியிருக்கும் ராகுல் காந்திக்கு கேபினட் அமைச்சருக்கான அந்தஸ்து மட்டுமல்ல, அவா்களுக்கு வழங்கப்படும் எல்லா வசதிகளும் வழங்கப்படுகின்றன - அலுவலக உதவியாளா்கள் உள்பட. தனக்கு இணக்கமான ஆட்சிப் பணி அதிகாரிகளின் பட்டியலை ராகுல் காந்தி தயாரித்துக் கொண்டிருந்தபோது, மக்களவைச் செயலகத்தால் அவருக்கு பட்டியல் அனுப்பப்பட்டது. அதிலிருந்து மூன்று பெயா்களைத் தோ்ந்தெடுத்து அனுப்பி இருக்கிறாா் ராகுல் காந்தி.

அவரது பட்டியல் அங்கீகரிக்கப்பட்டு அதிகாரிகள் இன்னும் நியமிக்கப்படவில்லை என்பது கடந்த வாரத் தகவல்.