வயநாடு: கேரள கிராமின் வங்கி, தங்களிடம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் பெற்ற கடனுக்கான தவணையை, மாநில அரசு அளித்த அவசரகால நிதியிலிருந்து கழித்திருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜூலை 30ஆம் தேதி வயநாடு நிலச்சரிவு சம்பவத்தில், உயிர் பிழைத்தவர்கள், தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளினால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளாத நிலையில், அவர்களது நிவாரணத் தொகையிலிருந்து கடன் தவணை கழிக்கப்பட்டிருப்பது அவர்களுக்கு பேரதிர்ச்சியை அளித்திருக்கலாம்.
வயநாடு நிலச்சரிவில் இதுவரை 230 பேர் பலியாகியிருக்கிறார்கள். 100 பேரை காணவில்லை என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிராமின் வங்கியின் பெரும் பங்குகளை (50 சதவீதம்) மத்திய அரசு வைத்துள்ளது. மற்ற பொதுத் துறை வங்கிகள் 35 சதவீதம் வைத்துள்ளன. கேரள அரசு 15 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
கேரள அரசு, வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அவசரத் தேவைகளுக்கு ரூ.10 ஆயிரம் உதவித் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைக்க உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில்தான், கடன் தவணைகள் அதில் கழிக்கப்பட்டிருப்பதாகவும், மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் வாசவன் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து கூறுகையில், அவர்களுக்கு அதிகபட்சமாக 5 ஆயிரம் வரை கடன் தவணை இருந்துள்ளது. மாநில அரசின் நிதித்தொகை வந்ததுமே வங்கிகள் அதனை கழித்துவிட்டன. சிலரோ, வீடு கட்டவும், வீட்டை மறுசீரமைப்பு செய்யவும் கடன் வாங்கியிருந்ததாகவும், வீடே தற்போது இல்லாத நிலையில் அதற்கான தவணையாக ரூ.3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை பிடிக்கப்பட்டிருப்பதாகக் கூறி கவலை தெரிவிக்கிறார்கள்.
நாங்கள் தினக்கூலிகளாக இருந்தோம், இப்போது நிலச்சரிவு எங்கள் வீடு, கால்நடைகள் என ஒன்றையும் விட்டுவைக்கவில்லை, மாநில அரசு கொடுத்த நிதியில்தான் வாடகைக்கு வீடு பார்க்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், அந்த நிதியும் இல்லை என்று கலங்கியபடி கூறுகிறார்கள் பலரும்.
இது குறித்து அமைச்சர் கூறுகையில், வங்கியின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வயநாடு துணை ஆட்சியர் கூறுகையில், கடன் தவணைகளை திரும்ப அளிக்கும்படி வங்கிக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.