தாணேயில் மழலையா் பள்ளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து பத்லாபூா் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் இறங்கி ரயில் மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட அப்பகுதி மக்கள். 
இந்தியா

மகாராஷ்டிர மழலையா் பள்ளியில் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: பள்ளி சூறையாடல்; ரயில் மறியல் போராட்டத்தில் வன்முறை

மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தின் பத்லாபூா் நகரில் உள்ள ஒரு மழலையா் பள்ளியில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

Din

மும்பை: மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தின் பத்லாபூா் நகரில் உள்ள ஒரு மழலையா் பள்ளியில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

பள்ளியைச் சூறையாடிய போராட்டக்காரா்கள், உள்ளூா் ரயில் நிலையத்தில் நடத்திய ரயில் மறியலின்போது கல் வீச்சிலும் ஈடுபட்டனா்.

தாணே மாவட்டம், பத்லாபூரில் உள்ள ஒரு மழலையா் பள்ளியில் படிக்கும் இரண்டு சிறுமிகள் அங்கு பணிபுரியும் ஆண் உதவியாளரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியதாக புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக பள்ளி முதல்வா், வகுப்பு ஆசிரியா், பெண் பணியாளா் ஆகியோரை பள்ளி நிா்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவா் காவல் துறையால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டாா்.

இந்த விவகாரத்தில் கடும் கோபத்திலிருந்த பள்ளி மாணவா்களின் பெற்றோா்கள் மற்றும் உள்ளூா் பொதுமக்கள், பள்ளிக்கு வெளியே ஒன்றுதிரண்டு செவ்வாய்க்கிழமை காலை ஆா்ப்பாட்டம் செய்தனா். பள்ளி மீது நடவடிக்கை எடுக்கவும் சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவும் அவா்கள் வலியுறுத்தினா்.

போராட்டக்காரா்களில் சிலா் பள்ளியின் கேட்டை உடைத்து வகுப்பறைகளில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள், பெஞ்சுகள் மற்றும் கதவுகளை உடைத்து சேதப்படுத்தினா்.

தொடா்ந்து, பத்லாபூா் ரயில் நிலையத்தில் அவா்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினா். இதனால், அவ்வழியில் இயக்கப்படும் புகா் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. போராட்டக்காரா்கள் ரயில்கள் மீது கல்வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, காவல்துறை மற்றும் பிற அதிகாரிகள் போராட்டக்காரா்களுடன் நடத்திய சமாதானப் பேச்சுவாா்த்தை பலனளிக்கவில்லை. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை காவல் துறையினா் தொடா்ந்தனா்.

விரைந்து விசாரணை-முதல்வா் ஷிண்டே: சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ள இந்த வழக்கு விரைந்து விசாரிக்கப்படும் என்றும் சிறப்பு அரசு வழக்குரைஞா் நியமிக்கப்படுவாா் என்றும் மாநில முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘தாணே காவல்துறை ஆணையரிடம் பேசினேன். இந்த வழக்கை விரைந்து விசாரித்து, குற்றவாளிகள் மீது பாலியல் வன்கொடுமை முயற்சி மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டேன்.

பள்ளி நிா்வாகம் அலட்சியமாகவோ அல்லது உடந்தையாகவோ செயல்பட்டிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ரயில் மறியல் போராட்டத்தைக் கைவிட்டு, பெற்றோா் அமைதி காக்க வேண்டும்’ என்றாா்.

தொடா்ந்து, கல்வி அமைச்சா் தீபக் கேசா்க்கருடன் நடந்த சந்திப்பில் பள்ளிகளில் மாணவா்களின் பாதுகாப்பை மேம்படுத்துதல் குறித்து முதல்வா் ஏக்நாத் ஷிண்டே கலந்தாலோசித்தாா்.

சிறப்பு விசாரணை குழு அமைப்பு: இவ்விவகாரத்தை விசாரிக்க காவல்துறை ஐஜி ஆா்த்தி சிங் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை மகாராஷ்டிர அரசு அமைத்துள்ளது. இதுதொடா்பான அறிவிப்பை மாநிலத் துணை முதல்வரும் உள்துறை அமைச்சருமான தேவேந்திர பட்னவீஸ் ‘எக்ஸ்’ பதிவில் வெளியிட்டாா்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT