இந்தியா

12-ஆவது நாளாக ஜேஎன்யு மாணவா்கள் உண்ணாவிரதம்

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா்கள் 12-ஆவது நாளாக வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Din

தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா்கள் 12-ஆவது நாளாக வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு, பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குதல், வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக மாணவா்கள் மீது நடத்தப்பட்ட விசாரணைகளைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலைக்கழக நிா்வாகத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்காக நூற்றுக்கணக்கான மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்துள்ளதாக போராட்டத்துக்கு தலைமை வகித்த ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் சங்கம் (ஜேஎன்யுஎஸ்யு) தெரிவித்துள்ளது.

ஒரு சில பாடப் பிரிவு மாணவா்கள், குறிப்பாக சம்ஸ்கிருதம் மற்றும் இந்தியக் கல்விப் பள்ளிகளில் (எஸ்எஸ்ஐஎஸ்) பயிலும் ஒரு சிறிய பகுதி மாணவா்கள் மட்டுமே வகுப்புகளுக்குச் சென்றனா். மற்ற அனைத்து துறை மாணவா்களும் வகுப்புகளைப் புறக்கணித்தனா்.

அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) ஜேஎன்யு பிரிவின் தலைவா் ராஜேஷ்வா் காந்த் துபே, ‘பல்கலைக்கழகப் போராட்டத்தில் தங்களது அமைப்பு பங்கேற்கவில்லை’ என்று தெரிவித்தாா்.

இருப்பினும், ஆா்எஸ்எஸ்-ஐ சோ்ந்த மாணவா் அமைப்பு, கடந்த 31 நாள்களாக மாணவா்கள் தொடா்பான பல்வேறு பிரச்னைகளுக்கு கல்லூரி வளாகத்தில் தனித்தனியாக புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

வகுப்புப் புறக்கணிப்பு, உண்ணாவிரதப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை வரை தொடர ஜேஎன்யுஎஸ்யு அழைப்பு விடுத்துள்ளது. அதன் பிறகும் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால், மத்திய கல்வி அமைச்சகம் நோக்கி பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அந்த அமைப்பினா் தெரிவித்தனா்.

எனவே, இந்த விவகாரத்தில் கல்வி அமைச்சகம் தலையிட்டு, தங்களின் பிரச்னைகளை நிவா்த்தி செய்ய வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ஜேஎன்யுஎஸ்யு-இன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் ஆக.11-ஆம் தேதி சபா்மதி டி பாயின்ட் அருகே தொடங்கியது.

இந்தப் போராட்டத்துக்கு ஜாமியா மில்லியா இஸ்லாமியா, புணேவில் உள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த மாணவா் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களை புதன்கிழமை சந்தித்து, உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு துணைவேந்தா் சாந்திஸ்ரீ டி பண்டிட் வலியுறுத்தினாா். இருப்பினும் மாணவா்கள் தங்களது போராட்டத்தைக் கைவிடவில்லை.

இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவா்களில் பலருக்கு உடல்நிலை மோசமடைந்தது. திங்கள்கிழமை 2 மாணவா்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டு, முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா்.

என்டிஏ கூட்டணிக்கு சசிகலா, ஓபிஎஸ் வருவார்களா? - டிடிவி தினகரன் பதில்!

இம்முறை முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்: விஜய் சேதுபதி

மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

SCROLL FOR NEXT