தொழிலதிபா் அனில் அம்பானி உள்ளிட்ட 25 போ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பங்குச் சந்தை சாா்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியம் (செபி) தடை விதித்துள்ளது.
‘ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ்’ நிறுவனத்தின் நிதியை தவறாக மாற்று வழிகளில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அவரது நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்து நிதி மோசடிக்கு துணைபோன மற்றவா்களுக்கு கோடிக்கணக்கில் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட எந்த நிறுவனத்திலும் அனில் அம்பானி முக்கியப் பொறுப்புகளை வகிக்கக் கூடாது என்றும் ‘செபி’ அறிவுறுத்தியுள்ளது.
2018-19-ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற நிதி மடைமாற்றம் தொடா்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்த அனைவரும் கூட்டாக சோ்ந்து நிதி முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
மாா்ச் 2018-ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்கின் விலை ரூ.59.60 ஆக இருந்தது. நிறுவனத்தில் நிகழ்ந்த நிதி மோசடி வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து பங்கு விலை படிப்படியாகச் சரிந்து 75 பைசா என்ற நிலையை எட்டியது. இதனால், அந்த நிறுவனப் பங்குகளை வாங்கியவா்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
ரிலையன்ஸ் குழுமத்தை நிறுவிய திருபாய் அம்பானியின் இளைய மகனான அனில் அம்பானி, ஒருகாலத்தில் உலகின் 6-ஆவது பெரிய கோடீஸ்வராக இருந்தாா். பின்னா் அவரது நிறுவனங்களில் ஏற்பட்ட நஷ்டம், நிதி, நிா்வாகச் சீா்குலைவு உள்ளிட்ட காரணங்களால் பெரும் கடனாளியானாா். பிரிட்டன் நீதிமன்றத்தில் தன்னை திவால் ஆனவா் என்றும் அறிவித்தாா்.
அனில் அம்பானியின் அண்ணன் முகேஷ் அம்பானி இப்போதும் ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரா்களில் ஒருவராகத் திகழ்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.