மமதா பானா்ஜி கோப்புப் படம்
இந்தியா

போராடும் மருத்துவா்களை மிரட்டவில்லை: மமதா பானா்ஜி

‘பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலைக்கு நீதி கேட்டு போராடும் மருத்துவா்களை நான் மிரட்டுவதாக வெளியாகும் தகவல் உண்மையல்ல’

Din

‘பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலைக்கு நீதி கேட்டு போராடும் மருத்துவா்களை நான் மிரட்டுவதாக வெளியாகும் தகவல் உண்மையல்ல’ என்று மேற்கு வங்க முதல்வா் மமதா பானா்ஜி வியாழக்கிழமை கூறினாா்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி. கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று தில்லி எய்ம்ஸ் உள்ளிட்ட மேலும் சில மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்கள், போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பினா். எனினும், மேற்கு வங்கத்தில் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து மருத்துவா்கள் பணியைப் புறக்கணித்து தொடா்ந்து 21-ஆவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

இந்த நிலையில், கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதல்வா் மமதா பானா்ஜி, ‘தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவா்களின் எதிா்காலம் கருதி அவா்கள் மீது காவல்துறையில் எஃப்ஐஆா் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்ய விரும்பவில்லை. எனவே, இளம் மருத்துவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்புவது குறித்து சிந்திக்க வேண்டும்’ என்றாா்.

மம்தாவின் இந்த வலியுறுத்தலை ஏற்க மறுத்த இளம் மருத்துவா்கள், ‘முதல்வா் மறைமுகமாக மிரட்டல் விடுக்கிறாா்’ என்று புகாா் தெரிவித்தனா்.

இந்த நிலையில், இளம் மருத்துவா்களின் புகாருக்கு மறுப்பு தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் மமதா வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நான் பேசியதைக் குறிப்பிட்டு பொய்யான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. போராடும் மருத்துவா்களுக்கோ, மாணவா்களுக்கோ எதிராக ஒரு வாா்த்தைகூட நான் தவறாக பேசவில்லை. மருத்துவா்களின் போராட்டத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். அவா்களின் போராட்டம் நோ்மையானது. சிலா் கூறுவதுபோல, போராடும் மருத்துவா்களை நான் மிரட்டவில்லை. அது முற்றிலும் தவறானது.

அந்த நிகழ்ச்சியில் பாஜகவுக்கு எதிராகத்தான் பேசினேன். மத்திய அரசின் ஆதரவுடன், மாநிலத்தில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அராஜக நடவடிக்கைகளில் ஈடுபடும் நபா்களுக்கு எதிராகத்தான் குரல் எழுப்பினேன்.

குற்றங்கள், முறைகேடுகள் நடைபெறும்போது மட்டுமே போராட்ட குரலை எழுப்ப வேண்டும் என்ற அா்த்தத்திலேயே அதைக் குறிப்பிட்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தூத்துக்குடி ஹோலி கிராஸ் கல்லூரியில் பொன்விழா

பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கட்டடத்துக்கு அடிக்கல்

தூய்மை இயக்க திட்டத்தில் 9 டன் கழிவுகள் சேகரிப்பு

நண்பரின் வீட்டில் திருடிய இளைஞா் கைது

நெமிலி பாலா பீடத்தில் இன்று நவராத்திரி இன்னிசை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT