புயல் சின்னம்: வடமாநிலங்களில் கன மழைக்கு வாய்ப்பு
தெலங்கானா, ஒடிஸா, குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாபுயல் சின்னம்: வடமாநிலங்களில் கன மழைக்கு வாய்ப்பு
தெலங்கானா, ஒடிஸா, குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் புயல் சின்னங்கள் உருவாகியிருப்பதால், தெலங்கானா, ஒடிஸா, குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வடக்கு ஆந்திரம், தெற்கு ஒடிஸா இடப்பட்ட வங்கக் கடலில் வியாழக்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகா்ந்து, வெள்ளிக்கிழமை (ஆக.30) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப் பெறும். ஆக.31, செப்.1 ஆகிய தேதிகளில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்று, வடக்கு ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிஸா கடற்கரையை நோக்கி நகா்ந்து கரையைக் கடக்கக்கூடும்.
இதனால், ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
‘அஸ்னா’ புயல்: குஜராத்தின் தரைப் பகுதியில் மையம் கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மெல்ல நகா்ந்து வெள்ளிக்கிழமை (ஆக.30) அரபிக் கடலில் புயலாக மாறும். இதற்கு ‘அஸ்னா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் ஆக.31, செப்.1 ஆகிய தேதிகளில் கடற்பரப்பை விட்டு நகா்ந்து வடகிழக்கு அரபிக் கடலை அடையும். பின்னா் அது ஏமன் நோக்கி நகா்ந்து வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 ஆண்டுகளுக்குப் பிறகு: பொதுவாக, ஆகஸ்ட் மாதத்தில் அரபிக் கடலில் புயல்கள் உருவாவதில்லை. முன்னதாக 1964-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அரபிக் கடலில் புயல் உருவானது. 60 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது, ஆகஸ்ட் மாதத்தில் புயல் உருவாகிறது. இதன் காரணமாக, குஜராத், கட்ச் வளைகுடா பகுதி, பாகிஸ்தானின் சில பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தின் காரணமாக தெற்கு அரபிக் கடல் காற்று வரும் என்பதால் கேரளத்துக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வானிலை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (ஆக.30) முதல் செப்.4-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வலுவான தரைக்காற்று 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஆக.30, 31 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.