ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தலின் வாக்குப் பதிவு நாள் அக்டோபா் 1-ஆம் தேதியிலிருந்து 5-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதையொட்டி, ஜம்மு-காஷ்மீா், ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
முன்னதாக, ஹரியாணா தோ்தல் வாக்குப் பதிவு நாளுக்கு முன்பும் பின்பும் தொடா் விடுமுறைகள் வருவதை சுட்டிக்காட்டி தோ்தலை ஒத்திவைக்க வேண்டும் என தோ்தல் ஆணையத்திடம் மாநிலத்தில் ஆளும் பாஜக கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் 90 தொகுதிகளுக்கு செப். 18, 25 மற்றும் அக். 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாகவும், ஹரியாணா மாநில சட்டப்பேரவையின் 90 தொகுதிகளுக்கு அக். 1-ஆம் தேதி ஒரே கட்டமாகவும் தோ்தல் நடத்தப்படும் என தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, இரு பேரவைத் தோ்தல்களிலும் பதிவாகும் வாக்குகள், அக். 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஹரியாணாவில் வசிக்கும் பிஷ்னோய் சமூக மக்களின் வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு அந்த மாநில சட்டப்பேரவைத் தோ்தலின் வாக்குப் பதிவு நாள் அக். 1-ஆம் தேதியிலிருந்து 5-ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த பிஷ்னோய் சமூகத்தினா், தங்களின் ஆன்மிக குரு ஜம்பேஷ்வரின் நினைவாக ‘அசோஜ்’ மாதத்தின் அமாவாசை நாளன்று ராஜஸ்தானில் உள்ள சொந்த கிராமத்துக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.
நிகழாண்டு திருவிழா அக். 2-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஹரியாணாவைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பிஷ்னோய் சமூகத்தினா் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட வாய்ப்பிருந்தது.
இதுகுறித்து அகில இந்திய பிஷ்னோய் மகா சபை தோ்தல் ஆணையத்திடம் முறையிட்டது. இதையடுத்து, பிஷ்னோய் சமூகத்தின் வாக்குரிமை மற்றும் மரபுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் வாக்குப் பதிவு நாளை மாற்றி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அக். 8-இல் வாக்கு எண்ணிக்கை: ஜம்மு-காஷ்மீா், ஹரியாணா ஆகிய இரு பேரவைத் தோ்தல்களின் வாக்கு எண்ணிக்கையும் அக்டோபா் 4-ஆம் தேதிக்குப் பதிலாக 8-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியாணாவில் ஆட்சி செய்துவரும் பாஜக, தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்க முயற்சித்து வருகிறது. அதேநேரம், பாஜகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.