உணவுப் பொருள்களில் எத்தனையோ கலப்படங்கள், போலிகளை மக்கள் அறிந்தே இருக்கிறார்கள். ஆனால், உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பால் என்று சொல்லி செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் பால் மற்றும் பனீர் விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நம்ம ஊர்களிலும் பல உணவகங்களிலும் கடைகளிலும் பனீர் என்று சொல்லி கொடுக்கும் உணவுப்பொருள்கள் பெரும்பாலும் பனீர் இல்லை என்பது சாப்பிடும்போது பலரும் உணர்ந்தே இருப்பார்கள்.
அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சஹரில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உண்மையான பாலின் எந்த தொடர்பும் இல்லாத வெறும் ரசாயனத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிந்தடிக் பால் மற்றும் பனீரை விற்பனை செய்து வந்த கும்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் அஜய் அகர்வால் என்ற வணிகர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பால் பொருள் தயாரிப்பு ஆலையை நிர்வகித்து வந்துள்ளார். அங்கு நடத்திய ஆய்வில்தான், வெள்ளை நிறத்தில் ரசாயனத்தைக் கொண்டு செயற்கை பால் தயாரித்து அதில் சுவை மற்றும் பால் மணத்தைக் கொடுப்பதற்கான ரசாயனங்களும் கலக்கப்படுவது தெரிய வந்துள்ளது. இதில் என்னென்ன ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன என்பது இதுவரை வெளிவரவில்லை.
உணவுத் தரக்கட்டுப்பாட்டுத் துறை உத்தரப்பிரதேசத்தில் பால் விற்பனை நிலையங்களில் நடத்திய ஆய்வின்போது கிடைத்தத் தகவலை வைத்து, கிடங்குகளிலும் சோதனை நடத்தினர்.
இந்த ஆய்வின்போதுதான், வெறும் 1 லிட்டர் ரசாயனத்தை வைத்து 500 லிட்டர் போலி பால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்ததைக் கண்டுபிடித்தனர். அதில் மிக மோசமான விஷயம் என்னவென்றால் அந்த ரசாயனத்தில் உருவாக்கப்பட்ட பாலுடன் சுவையைக் கூட்டும் சில ரசாயனங்களும் சேர்க்கப்படுகின்றன. அவை சேர்ந்ததும் பால் போன்ற சுவையுடன் எந்த வித்தியாசமும் இல்லாமல் இருப்பதுதான் இதன் கூடுதல் அபாயமே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.