உலகின் ஒட்டுமொத்த தங்க இருப்பில், இந்திய பெண்களிடம் இருக்கும் தங்கம் மட்டும் 11 சதவீதம் என்கிறது தரவுகள்.
இந்தியாவில்தான் தங்கம் வெறும் சேமிப்பு அல்லது சொத்தாக மட்டுமல்லாமல், பாரம்பரியம், பழக்க வழக்கம், நமது வாழ்முறையை நிர்ணயிக்கும் ஒரு பொருளாகவும் இருந்து வருகிறது.
இந்திய பெண்களுக்கும் தங்கத்துக்கும் அந்த அளவுக்குப் பிரிக்க முடியாத தொடர்பும் நெருக்கமும் உள்ளது. அதுவும் திருமணமான பெண்கள் என்றால், அவர்களுக்கு என்று கணிசமாக ஒரு நகைப் பட்டியல் இருக்கும். அதுதான் அவர்களது மதிப்பை அதிகரிப்பதாகவும் எண்ணம் உள்ளது.
அந்த வகையில், பெண்கள் எப்போதும் தங்கத்தை வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள். சிறுக சிறுக சேமித்து பெரும்பாலும் பெண்கள் வாங்குவது என்னவோ தங்க நகைகள்தான்.
இந்த நிலையில்தான், உலக தங்க கவுன்சிலின் அறிக்கை ஒன்று வெளியாகி பரபரப்பை கூட்டியிருக்கிறது. இந்தியப் பெண்கள் மட்டும் கிட்டத்தட்ட 24,000 டன் தங்கம் வைத்திருக்கிறார்களாம். இது உலகின் மொத்த தங்க கையிருப்பில் 11 சதவீதமாம். அதுவும் நகையாக உள்ளதாம்.
இதை இப்படி சொல்வதை விடவும், தங்க கையிருப்பில் முதல் 5 நாடுகளின் மொத்த தங்க இருப்பைக் காட்டிலும் இந்திய பெண்கள் தங்க நகையாக வைத்திருக்கும் தங்கத்தின் அளவு அதிகமாம்.
அதாவது, அமெரிக்காவில் 8,000 டன் தங்கம், ஜெர்மனியிடம் 3,300 டன் தங்கம், இத்தாலி 2450 டன் தங்கம், பிரான்ஸ் 2,400 டன் தங்கம், ரஷ்யா 1900 டன் தங்கம் கையிருப்பில் வைத்திருக்கிறது. ஆனால் என்ன இவையெல்லாம் கூட்டினால், இந்தியப் பெண்களின் தங்க நகைக்கு ஈடாகாது என்கின்றன தரவுகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.