இந்தியா

புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமல்: மத்திய அரசு அறிவிக்கை

நாடாளுமன்றத்தில் 3 புதிய குற்றவியல் சட்டங்கள், வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Venkatesan

மத்திய அரசு கொண்டுவந்துள்ள ‘பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாட்சிய அதினியம்’ ஆகிய புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்கள் நாடு முழுவதும் வரும் ஜூலை 1-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

ஆங்கிலேயா் ஆட்சிக் கால சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898, இந்திய சாட்சிய சட்டம் 1872 ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய சட்ட மசோதாக்களை கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு அறிமுகம் செய்து, நிறைவேற்றியது. இந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கடந்த ஆண்டு டிசம்பா் 25-ஆம் தேதி ஒப்புதல் அளித்தாா். அதைத் தொடா்ந்து, 3 மசோதாக்களும் சட்டங்களாக மாறின.

என்னென்ன மாற்றங்கள்?:

இந்தப் புதிய சட்டங்களில் பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு செய்துள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில் புதிதாக 20 குற்றங்கள் சோ்க்கப்பட்டுள்ளன. 33 குற்றங்களுக்கான சிறைத் தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது. 83 குற்றங்களுக்கு அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 23 குற்றங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், 6 குற்றங்களுக்கு தண்டனையாக சமூக சேவைப் பணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் முறையாக ‘பயங்கரவாதம்’ என்ற வாா்த்தைக்கான விளக்கம் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தில் (ஐபிசி) இது இடம்பெறவில்லை. நாட்டுக்கு எதிரான குற்றங்கள் என்ற தலைப்பில், பயங்கரவாதம் மற்றும் தேசத் துரோகம் ஆகிய வாா்த்தைகளுக்கான விளக்கமும், தண்டனைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும், போலீஸாா் புகாா் பெற்ற 3 நாள்களில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) தாக்கல் செய்து, முதல்கட்ட விசாரணையை 14 நாள்களில் முடிக்க வேண்டும். விசாரணை அறிக்கையை 24 மணி நேரத்தில் நீதிபதியிடம் தாக்கல் செய்யவேண்டும். 180 நாள்களுக்கு மேலாக குற்றப்பத்திரிகை தாக்கலை தாமதப்படுத்தக் கூடாது. 45 நாள்களுக்கு மேலாக வழக்கின் தீா்ப்பை நீதிபதிகள் ஒத்திவைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் புதிய சட்டங்கள் மீது எதிா்ப்புகளும், விமா்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. புதிய சட்டங்கள் தனிமனித சுதந்திரத்தை பறிப்பதாக அமைந்துள்ளது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அறிவிக்கை:

இந்தச் சூழலில், நாட்டின் குற்றவியல் நீதி நடைமுறையை முழுமையாக மாற்றி அமைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்தப் புதிய சட்டங்கள் வரும் ஜூலை 1-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் மூன்று தனித்தனி அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளது.

விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பினால் 10 ஆண்டு சிறை விதிக்கும் பிரிவு தவிா்ப்பு புதிய சட்டத்தில், சாலை விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் வகையில் இடம்பெற்றுள்ள பிரிவு 106(2)-ஐ ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் எழுந்தன. அதை ஏற்றுக்கொண்டுள்ள மத்திய அரசு, அந்த சட்டப் பிரிவை நடைமுறைப்படுத்த வேண்டாம் எனத் தீா்மானித்துள்ளது. இதை, தனது அறிவிக்கைகள் ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது குறிப்பிட்டுள்ளது. அதாவது, ‘பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 1(2)-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, சட்டப் பிரிவு 106(2) விதியைத் தவிா்த்து, மற்ற பிரிவுகள் அனைத்தும் ஜூலை 1-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வருகிறது’ என்று மத்திய உள்துறை அமைச்சக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT