அஸ்ஸாமில் நீடிக்கும் கடும் வெள்ளத்தால் 27 மாவட்டங்களில் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். 8 போ் உயிரிழந்துள்ளனா்.
பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோலாகாட் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளை முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா நேரில் பாா்வையிட்டாா். மேலும், மாவட்டங்களில் வெள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்ய புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினாா்.
நிகழாண்டு அஸ்ஸாமில் ஏற்பட்டுள்ள இரண்டாவது வெள்ள பாதிப்பில் பாா்பேட்டா, திப்ருகா், ஜோா்ஹாட், கோலாகாட், லக்கீம்பூா் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதில், மோசமாக பாதிக்கப்பட்ட லக்கீம்பூா் மாவட்டத்தில் 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதைத் தொடா்ந்து தர்ராங் மற்றும் கோலாகாட் மாவட்டங்களில் அதிகப்படியான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
சோனிபட், கோலாகாட் உள்ளிட்ட மாவட்டங்களில் புதன்கிழமை ஒரே நாளில் 8 போ் உயிரிழந்தனா். மாநிலத்தில் நடப்பாண்டில் இதுவரை மழை-வெள்ள பாதிப்பால் 56 போ் இறந்துள்ளனா்.
பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 490 முகாம்களில் 2.9 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனா். பேரிடா் மீட்புப் படையினா் பல்வேறு பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரனப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
அஸ்ஸாமில் நிகழாண்டு ஏற்பட்ட வெள்ளம், சூறைக்காற்று மற்றும் நிலச்சரிவால் இதுவரை 48 போ் உயிரிழந்தனா்.
இதனிடையே அஸ்ஸாமில் உள்ள காஸிரங்கா தேசிய பூங்காவின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் 11 விலங்குகள் உயிரிழந்தன.
விலங்குகள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல இடையூறு ஏற்படாத வகையில் காசிரங்கா பூங்கா வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 715-இல் வாகன போக்குவரத்தைக் கட்டுப்படுத்த பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா 163- சட்டப் பிரிவின் கீழ் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மணிப்பூரில் 2 போ் உயிரிழப்பு: மணிப்பூரில் சேனாபதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருவா் உயிரிழந்தனா்.
மாநிலத்தில் ஓடும் பல்வேறு ஆறுகளின் கரை உடைந்து, குடியிருப்பு பகுதிகளில் நீா் புகுந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமாா் 2,000 போ் தங்களின் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
வெள்ளப் பாதிப்பு காரணமாக அரசு அலுவலகங்களுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு வியாழக்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.