ரஷியா - உக்ரைன் இடையிலான போரில் அமைதியை நிலைநாட்ட எந்த வகையிலும் உதவத் தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.
மாஸ்கோவில் பிரதமர் நரேந்திர மோடியும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் இருநாட்டு உறவுகள் குறித்து இன்று (ஜூலை 9) பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிரதமர் மோடி, இரண்டு நாள்கள் பயணமாக ரஷியா சென்றுள்ள நிலையில், இரண்டாவது நாளான இன்று மாஸ்கோவிலுள்ள வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து இன்றும், அதிபர் விளாதிமீர் புதினை மோடி சந்தித்தார். அப்போது இரு நாட்டு உறவுகள் குறித்தும், எல்லைகளிடையே அமைதியை நிலைநாட்டுவது குறித்தும் மோடி பேசினார்.
அதிபர் உடனான சந்திப்பில் மோடி பேசியதாவது,
''இந்தியா - ரஷியா இடையிலான உறவு மிகவும் ஆழமானது. எரிசக்தித் துறையில் இந்தியா - ரஷியா இடையிலான ஒத்துழைப்பு உலகத்திற்கும் உதவியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 17 முறை இருவரும் சந்தித்துள்ளோம். 22 முறை இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
40 ஆண்டுகளாக இந்தியா தீவிரவாதத்தை சந்தித்து வருகிறது. அது கொடூரமானது என்பது எங்களுக்குத் தெரியும். மாஸ்கோவில் தீவிரவாத செயல்கள் நடந்தபோது அதன் வலியை உணர முடிந்தது.
புதிய தலைமுறையின் வளமான எதிர்காலத்துக்கு அமைதி மிக முக்கியமானது. வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், தோட்டாக்களுக்கு மத்தியில் அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றியடையாது.
அமைதியின் பக்கம் இந்தியா நிற்கிறது என்பதை உங்களுக்கும் உலகத்துக்கும் முன்பு உறுதி அளிக்கிறேன். நேற்றைய உங்களின் பேச்சு புது நம்பிக்கையைத் தருகிறது.
அமைதியை திரும்ப நிலைநாட்ட எந்த வடிவிலும் உதவுவதற்கு இந்தியா தயாராக உள்ளது. அப்பாவி குழந்தைகள் போரில் கொல்லப்படுகின்றனர். அவர்கள் கொல்லப்படுவது இதயத்தை கிழிப்பதைப் போல் உள்ளது.
போரில் எந்தத் தீர்வும் கிடைக்காது. உக்ரைன் மீதான பார்வையை நேற்றைய சந்திப்பில் இருவரும் பகிர்ந்துகொண்டோம். அமைதி மற்றும் நிலைத்தன்மை குறித்த தெற்கு உலகின் எதிர்பார்ப்பை நேற்று உங்கள் முன் வைத்தேன்.
கடந்த 5 ஆண்டுகளில் கரோனா முதல் பல்வேறு சவால்களை உலக நாடுகள் எதிர்கொண்டுள்ளன'' என புதின் உடனான சந்திப்பில் மோடி குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.